
இதே போல் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வழி பாட்டு தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் கடந்த 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) வரை தொடர்ந்து 5 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சார்ச்கள், மசூதிகள் அடைக்கப்பட்டு இருந்தன. வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 5 நாட் களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கட்டுபாடுகளுடன் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை வழக்கம் போல் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சத்திய மங்கலம் மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். சமூக இடை வெளியுடன் முககவசம் அணிந்து கொண்டு பக்தர்கள் வந்தனர்.
பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய 5 நாட்களுக்கு பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அவர்களுக்கு மட்டுமே கூடுதுறையில் புனிதநீராட அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் அருகே உள்ள அய்யப்ப சேவா மண்டபம் பகுதியில் உள்ள ஆற்றில் மற்ற பக்தர்கள் குளித்தனர். ஆனால் இன்று குறைந்த அளவிலேயே மக்கள் வந்து இருந்தனர்.
சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். பொது மக்கள் தர்ப்பணம் உள்பட பல்வேறு பரிகாரங்கள் செய்தனர்.
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் வாக்கு கேட்டு சென்றனர்.
மேலும் கொடுமுடி மகுடேஸ்வரர், கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன், பவானி கருமாரியம்மன், பெருந்துறை ஈஸ்வரன் கோவில், சென்னிமலை முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், பத்ர காளியம்மன், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கருங்கல் பாளையம் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.