
தல புராணங்களின் படி தேவலோக சிற்பி விஸ்வகர்மா மகளான சமுக்ஞாவை திருமணம் செய்து கொண்டார் சூரியன். நாள்பட சூரியனின் வெப்பம் தன்னால் தாங்க முடியாமல் போக தனது நிழலையே உருவமாக செய்து கணவனிடம் விட்டு சென்று விட்டாள் சமுக்ஞா. இதையறிந்த சூரியன் தனது மனைவியை திரும்ப அழைத்து வர சென்ற போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றியது, அதை பின்தொடர்ந்து சூரியன் சென்ற போது அது ஒரு தாமரை தடாகத்தில் சென்று ஒரு தாமரை பூவில் சென்று
அந்த தாமரை மலரிலிருந்து தோன்றிய சிவபெருமான் சூரியன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழும் படியாக அருள்புரிந்தார். சூரியனின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். சூரியன் பூஜை செய்த லிங்கம் தாமரை தடாகத்தில் உள்ளேயே இருந்தது, பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த சோழ மன்னன் ஒருவன், மின்னிக்கொண்டிருக்கும் அந்த தாமரை மலரை பறிக்க முயற்சித்தான். ஆனால் அந்த தாமரை மலர் நகர்ந்து சென்றதே தவிர கையில் சிக்கவில்லை, இதனால் பொறுமை இழந்த மன்னன் அந்த தாமரை மலரை வெட்டிய போது ரத்தம் பீறிட்டது. இதை கண்ட மன்னனின் பார்வை உடனே பறிபோனது.
பிறகு சிவபெருமானிடம் மனமுருக வேண்டிய மன்னனின் முன்பு தோன்றிய சிவபெருமான் மன்னனுக்கு பார்வை வரத்தை அளித்ததோடு, அந்த தடாகத்திலேயே தான் இருப்பதாக கூறினார். பின்பு அந்த சோழ மன்னன் அங்கு அழகிய ஆலயத்தை நிர்மாணித்து, அங்கேயே லிங்க பிரதிஷ்டை செய்தான். புஷ்பத்தில் லிங்கமாக சிவபெருமான் இருந்ததால் புஷ்பரதேஸ்வரர் கோயில் என பெயர் பெற்றது.
இக்கோயிலில் மூலஸ்தானத்திற்கு முன்பாக சூரியன், புஷ்பரதேஸ்வரர் சந்நிதியை பார்த்தவாறு இருக்கிறார். இவர் இங்கு சிவபெருமானை எப்போதும் வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை மாத பிறப்பின் போது முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை ஆகியோர் மீது சூரிய ஒளி படுகிறது. இக்காலத்தில் சூரியன் இவர்கள் இருவருக்கும் பூஜைகள் செய்வதாக ஐதீகம். எனவே அந்த தினத்தில் சிவனுக்கு உச்சி கால பூஜைகள் செய்வதில்லை. சைவ சமய நால்வரில் ஒருவரான சுந்தரரின் மனைவியான சங்கிலி நாச்சியார் இவ்வூரில் பிறந்தவர் ஆவார். இவருக்கும் இங்கு சந்நிதி இருக்கிறது.
மகர சங்கிராந்தி தினமான தை பொங்கல் தினத்தில் சூரியனுக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. சூரியன் நவகிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. மற்ற கிரகங்களுக்குரிய கிழமைகளில் அந்த கிரகங்களின் தோஷம் நீங்க சிவப்பு நிற வஸ்திரங்களை சாற்றி, கோதுமை மாவு, நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பொதுவாக விநாயகர் தலையில் கிரீடத்துடன் இருப்பார். ஆனால் இத்தலத்தில் கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தனது தந்தையான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விநாயகர் இக்கோலத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இவரை பல்லவ விநாயகர் என அழைக்கின்றனர். இவரை வணங்குவதால் பொருளாசை, பதவி ஆசை முதலியவை நீங்குவதாக ஐதீகம். கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சந்நிதி இருக்கிறது.
கண் தொடர்பான நோய்கள் தீர இங்கு வந்து வழிபட அவை தீரும் என்பது பக்தர்களின் வாக்கு. மேலும் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவர்கள் என்றும் பல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும் இங்கு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.
கோயில் நடை திறப்பு
காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி
அருள்மிகு புஷ்பரதேஸ்வர் கோயில்
ஞாயிறு
திருவள்ளூர் மாவட்டம் – 600067