
கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.
“அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே!
அண்டகோடி புகழ்காவை வாழும்
அகிலாண்டநாயகி என் அம்மையே”
என்று அன்னையின் அருள் நிலையைப போற்றுகின்றார். அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்.
“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
அணிஉருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவியல்மதியம் சூடிய பெருமான்
பித்தன் என்றொருபெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்
கா அகிலாண்ட நாயகியே”
என்று பாடிப் போற்றுகின்றான். அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன். அன்னையைக் கண்டு வழிபட்ட அக் கவிஞன், அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே! இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக, அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.