
நவக்கிரகங்களில் வலிமையானவராக கருதப்படும் ராகு பகவான் நாகவல்லி, நாக கன்னி என தனது இரு மனைவிகளுடன் இங்கு மங்கள ராகுவாக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். ராகு கால பூஜையின் போது இக்கோவிலில் ரகுபகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அப்போது பால் நீலநிறமாக மாறும் அதிசயம் இன்றளவும் நடக்கிறது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு ரூ.5 கோடி செலவில், 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்களில் திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகளை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில், ராகு தலம் அர்ச்சகர்கள் உமாபதி, சரவணன், சங்கர், செல்லப்பா, ஸ்ரீதரன், ராஜேஷ்குருக்கள் உள்பட 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதுவார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினர்.
6 கால யாக சாலை பூஜைகளும் முடிவடைந்த பின்னர் நேற்று காலை 7 மணி அளவில் 13 பரிவார தெய்வ விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.