
இதனைத்தொடர்ந்து தினந்தோறும் இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு கருட வாகன சேவை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று திருக்கல்யாண உற்சவம் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி பெட்டதம்மன் மலை குகையில் இருந்து அம்மன் அரங்கநாயகி தாயார் அழைத்துவரப்பட்டார். கோவிலில் அரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்க பெருமாள் வீற்றிருந்தார். தொடர்ந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.முன்னதாக மஞ்சள் இடித்தல், கங்கணம் கட்டுதல், பூணூல் அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு அரங்கநாதபெருமாள் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், வருகிற 1-ந் தேதி தெப்ப உற்சவமும், 2-ந் தேதி சாற்றுமுறை உற்சவ மூர்த்தியும், 3-ந் தேதி வசந்த விழாவும் நடைபெறுகின்றன.