
சுவாமியே...சரணம் ஐயப்பா....என்ற சரண கோஷம். கருப்பு, நீலம் மற்றும் காவிநிற வேட்டி அணிந்து கொண்டு திரியும் ஐயப்ப பக்தர்கள். கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் அனைத்து இடங்களிலும் இதனை நாம் காண முடியும்.
சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் 1-ந்தேதி அதிகாலையில் எழுந்து குளித்து ஐயப்பன் படம் தரித்த டாலருடன் கூடிய மாலையணிந்து விரதத்தை தொடங்குவர் ஐயப்ப பக்தர்கள்.
அன்றில் இருந்து தினமும் காலை மற்றும் மாலையில் குளித்து வீட்டில் பூஜைகள் செய்து ஐயப்பனை வழிபடுவார்கள். 41நாள், 48நாள், 60நாள் என தங்களது வேண்டுதலுக்கு தகுந்தாற் போல் விரதம் இருப்பார்கள். பின்னர் இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வார்கள்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் பம்பையில் இருந்து மலை ஏறிச்செல்கின்றனர். இருந்தபோதிலும் பெரு வழிப்பாதையில் வந்து சபரிமலைக்கு செல்லக் கூடிய பக்தர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. வனவிலங்குகள் நிறைந்த காட்டு வழிப்பாதையான பெருவழிப்பாதையில் இருந்து சபரிமலைக்கு தூரம் அதிக மாக இருந்தாலும், அந்த பயணம் பக்தர்களுக்கு இனிமையானதாகவே இருக்கிறது.
ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மண்டல காலம் கடவுளை நினைத்து வேண்டி பூஜைகள் செய்து, வழிபாடு நடத்தி, இறுதியில் நடைபயணம் மேற்கொண்டு மலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த பிறகே பூரண திருப்தி அடைவார்கள் ஐயப்ப பக்தர்கள். எத்தனை வேண்டுதல்கள் வைத்தாலும், அதில் முக்கியமானதாக இருப்பது அடுத்தஆண்டும் இதுபோன்று வந்து உன்னை தரிசிக்க வேண்டும் என்பதே.
பயணத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பக்தர்களை காப்பது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் ஒன்று தான். அந்த கோஷமே ஊக்கமும், உற்சாகமும் தந்து பக்தர்களின் பயணத்தை சுகமானதாக மாற்றிவிடுகிறது. ஒருமுறை சபரிமலைக்கு மாலையணிந்து தரிசனம் செய்தவர்களை, மீண்டும் மீண்டும் வரச்செய்யும் சக்தி படைத்தது சபரிமலை.
அதேநேரத்தில் ஐயப்பர் பிரம்மச்சாரி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கன்னி சாமிகளும் சபரிமலைக்கு புதிதாக வருகிறார்கள். ஏற்கனவே வருபவர்கள், புதியவர்கள் என பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இதனால் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் தினமும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்படும். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தே சாமி தரிசனம் செய்யமுடியும். கடவுளை காண காத்திருப்பது பக்தர்களுக்கு பெரிய விஷயம் இல்லை. இதனால் எத்தனை மணி நேரம் ஆனாலும் காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
எத்தனை கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கடவுளை கண்டதும், அனைத்தும் பக்தர்களின் மனதில் இருந்து பறந்தோடிவிடும் என்பதே மறுக்கமுடியாத உண்மை. எப்படியும் ஐயப்பனை பார்த்துவிடவேண்டும் என்பதே ஐயப்பபக்தர்களின் நோக்கமாக இருக்கும். ஆனால் இந்த வருடமோ, எப்படி ஐயப்பனை பார்க்கப்போகிறோம் என்று புலம்பி வருகிறார்கள் ஐயப்ப பக்தர்கள். அதற்கு காரணம் கொரோனா.
பல மாதங்களாக வீட்டினுள் முடக்கம், வீட்டில் இருந்து வெளியே வந்து செல்வதற்கு கட்டுப்பாடுகள், எப்போதும் முகக்கவசம் அணிந்து இருத்தல் என மக்களின் வழக்கமான வாழ்க்கை நடைமுறைகளையே மாற்றிவிட்டது இந்த கொரோனா. அந்த வரிசையில் மக்களின் வழிபாடுகளும் நின்று விட்டதும் ஒன்று.
கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை ஐயப்ப கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதலே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் மாதந்தோறும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டன. மாதங்கள் கடக்க கடக்க ஐயப்ப பக்தர்களின் மனதில், இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியுமா? என்ற ஒருவித பயம் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது ஐப்பசி மாதம். ஆம்... 7மாதங்களுக்கு பிறகு ஐப்பசி மாத மாதாந்திர பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தினமும் 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எப்படி யென்றாலும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று ஐயப்பனை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் துளிர்த்தது.
அந்த காலக்கட்டமும் வந்தது. ஆனால் பக்தர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2ஆயிரம் பக்தர்களும், மற்ற நாட்களில் 1000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வர முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவித்தது.
தினமும் ஆயிரக்கணக்கிலும், விடுமுறை தினங்களில் லட்சத்தையும் பக்தர்கள் எண்ணிக்கை தொட்டுவிடும். அவ்வாறு இருக்கும் பட் சத்தில், வெறும் 1000பேருக்கு மட்டும் அனுமதி என்றால் எப்படி வழக்கமாக ஆண்டுதோறும் வரக்கூடிய அனைவரும் எப்படி சபரிமலைக்கு வர முடியும் என்ற கேள்விஅனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் எழுந்தது.
இருந்தபோதிலும் ஐயப்பனை தரிசனம் செய்ய முன்பதிவு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எற்பட்டதால் முன்பதிவு தொடங்கிய நவம்பர் 1-ந்தேதி என்று வரும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது. லட்சக்கணகான பக்தர்கள் சபரிமலை தரிசன வெப்சைட்டுக்குள் சென்று காத்திருந்தனர்.
ஆனால் தொடங்கிய 2மணி நேரத்தில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து நாட்களுக்கும் தரிசனம் செய்ய முன்பதிவு முடிந்துவிட்டது. அந்த இரு சீசன் காலத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். ஆனால் அனைத்து நாட்களுக்கும் சேர்த்து வெறும் 84ஆயிரம் பக்தர்களே சபரிமலைக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டது.
சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சென்றாலும் அதிகளவில் செல்வது தமிழக பக்தர்கள் தான். தமிழகத்தை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு செல்வார்கள். அவர்கள் எல்லாம் சபரி மலைக்கு எவ்வாறு செல்வது என்ற தவிப்பு ஏற்பட்டது.
ஆன்லைனில் முன் பதிவு செய்தால் தான் செல்ல முடியும் என்பது தற்போதைய விதிமுறையாக இருக்கிறது. அதுவும் அரசின் தற்போதைய அவிப்பின்படி, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான தரிசன முன் பதிவு முடிந்து விட்டது. ஆகவே தரிசனத்துக்கு அனுமதிக்கக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று தேவசம்போர்டும் கேரளஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தினமும் 10ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்பதே தேவசம்போர்டின் கோரிக்கையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒருகோடி ரூபாய் வரை செலவு ஆவதாகவும், ஆனால் ரூ10லட்சம் வரையே வருமானம் வருவதாகவும், ரூ90லட்சம் இழப்பு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி தேவசம் போர்டு மந்திரிக்கு கடிதங்கள் அனுப்பி இருக்கிறது.
ஆனால் அதுபற்றி கேரள அரசு எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்த வேறு வழியில்லாததால், மேற்கொண்டு என்ன செய்வது என்று கேரள அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அதேவேளையில் எப்படியும் தரிசனத் திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அரசு அறிவிக்கும் என்ற நம்பிக் கையில் லட்சக்கணக்கான தமிழக பக்தர்கள் உள்ளனர். சபரிமலை முன்பதிவுக்கான வெப்-சைட்டை தொடர்ந்து கண்காணித் தபடி இருக்கின்றனர்.
சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களில் சிறுவர்களும் உண்டு. முதியவர்களும் உண்டு. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் 10வயதிற்கு குறைந்த சிறுவர்கள் மற்றும் 60வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வர அனுமதியில்லை.
இதனால் அவர்கள் இந்த ஆண்டு சபரிமலைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி தரிசன முன்பதிவுக்கு அனுமதி கிடைக்காத லட்சக்கணக் கான பக்தர்கள் சபரிமலைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டி ருக்கிறது. அவர்களில் பலர், முன்பதிவு செய்ய வழியில் லாமல் தவித்தாலும், வழக்கம்போல் மாலையணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஆன்-லைனில் முன்பதிவு செய்ய வழியிருந்தால் முன்பதிவு செய்து சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களது ஊருக்கு அருகில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்ய முடிவெடுத்து விரதம் இருந்து வருகின்றனர். இருந்தபோதிலும் சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதிகிடைக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.