
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரைநடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.15 மணியில் இருந்து 7.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழாவில் 28-ந்தேதி(சனிக்கிழமை) இரவு 6.30 மணியளவில் பட்டாபிஷேகம், 29-ந்தேதி மாலை 6 மணியளவில் மலையில் உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 30-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனரும், தக்கருமான செல்லத்துரை, துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இறுதி நாளான வருகிற 21-ந்தேதி மாலையில் பாவாடை தரிசனம் நடக்கிறது. இதேநாளில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது. ஆகவே ஒரே நாளில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவும், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கமும் நடைபெறுவது விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.