
அதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். மேலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் அதிகமான பக்தர்கள் சமயபுரம் வருவார்கள். நேற்று புரட்டாசி மாத அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையில் இருந்தே அம்மனை தரிசனம் செய்வதற்காக கார், வேன், பஸ்கள் மூலமாக வந்தனர்.
அவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் முடிகாணிக்கை செய்தும், குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் சுமந்து சென்றும் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் முன்புறமும், நெய்விளக்கு ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
அதைத்தொடர்ந்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்மனை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் பணியாளர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளில் சானிடைசர் தெளித்த பின்பும், முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
பக்தர்கள் கோவிலுக்குள் தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்துள்ளதால் கோவிலைச்சுற்றி கடை வைத்துள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என்று கண்காணிக்கும் வகையில், சமயபுரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.