
இவரின் பக்தியை சோதிக்க வேண்டி சிவபெருமான் கடலில் தங்க மீன் ஒன்றை அவர் வீசிய வலையில் கிடைக்குமாறு செய்தார். அதிபத்தர் தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு சென்றார். அவரின் எதிர்பார்ப்பு இல்லாத பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தர் முன்பு காட்சி கொடுத்தனர்.
இதை நினைவுகூரும் வகையில் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் குருபூஜை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின்போது கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக சென்று நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நாகை புதிய கடற்கரைக்கு செல்வார். பின்னர் அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான அதிபத்த நாயனார் குருபூஜை நேற்று நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சாமி வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விழாக்கள் அனைத்தும் கோவில்களுக்குள்ளேயே நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து சாமி, அம்பாள் ரிஷபவாகனத்தில் புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடந்தது. அதேபோல அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி, நம்பியார் நகர் கிராமத்துக்குள்ளேயே நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.