
இந்த 3 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தேன், இளநீர், பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடி பட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடக்கிறது.
முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம், அபிஷேகம் போன்றவை நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை, நிவேத்யபூஜை, உஷபூஜை, உஷ தீபாராதனை, மதியம் உச்சிகாலபூஜை, உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம்வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்கள் இன்றி இந்த பூஜை நடைபெறும்.
அதை தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் ரமேஷ் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.