
வைகுண்ட சொர்க்கவாசல் 2020 ஜனவரி 6-ந்தேதி 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் இராப்பத்து தொடங்குகிறது. “வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்” என்ற வாக்கியத்திற்கேற்ப மனிதர்கள் அனைவரின் விருப்பமாக இருக்கும் முக்தி எனப்படும் மீண்டும் பிறவாமை பேறு தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை குறித்தும் அதனால் நாம் பெறும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
புராணக்கதை
அசுரன் முரன் என்பவன் தேவர்கள் முதலான அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அசுரனிடமிருந்து தங்களை காக்குமாறு ஈசனை சரணடைந்தனர் தேவர்கள். ஈசனோ, தேவர்களை மகாவிஷ்ணுவிடம் முறையிட சொன்னார். விஷ்ணுவை சரணடைந்த தேவர்களுக்காக சுமார் 1000 வருடங்கள் கடுமையாக அசுரனுடன் போர் புரிந்தார் மகாவிஷ்ணு. அதன் பிறகு மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்ட அசுரன், பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டு, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
சிறப்பு
மகாவிஷ்ணு விழித்தெழுந்து நடந்ததை அறிந்து, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார். உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்தார். தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து ஸ்ரீநாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று இனிதே வாழ்வோம் என்பது ஐதீகம். மாதந்தோறும் ஏகாதசி உண்டு என்றாலும் மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. இந்த நாளில் வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்படும். பெருமாள், பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.
சொர்க்க வாசல்
பெருமாள் கோயில் களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, ராப்பத்து உற்சவமாக சிறப்பாக நடைபெறும். ராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது.
இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டினார். பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.
விரதம்
தமிழ் மாதங்களில் வரக்கூடிய வளர்பிறை, தேய்பிறை ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருக்க பகவான் நாமாக்களை சொல்வது, பஜனை சொல்வது பலகோடி ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ இந்த ஏகாதசியில் கிடைக்கிறது. வைஷ்ணவ ஆலயங்களில் வடக்கு பாகத்தில் சொர்க்க வாசல் மண்டபம் அமைத்து பெருமாளை எழுந்தருளச் செய்து விசேஷ பூஜைகள் செய்து வடக்கு வாசல் வழியாக பெருமாளை புறப்பாடு செய்வார்கள்.
அதன்பிறகு பக்தர்கள் தரிசனம் செய்து தாம் பிறந்தது முதல் செய்த பாபங்கள் விலகி மோட்ச சாம்ராஜ்யத்தை அடைகிறார்கள். இதில் பக்தர்கள் ஏகாதசி அன்று குழுவதும் விரதமாக இருந்து பகவானுடைய நாமாக்களை சொல்லுதல், நாம சங்கீர்த்தனம் செய்தல் இது போன்று அன்று முழுவதும் இருந்து இரவு தூங்காமல் மறுநாள் துவாதசி அன்று நீராடி ஆலயத்தில் துவாதசி விசேஷ பூஜை பிரசாதங்களை பெற்ற பிறகு விரதம் பூர்த்தியாகிறது. ஏகாதசியன்று விரதம் இருந்தால் உடல் நலம் பெறும், மனக்கவலைகள் நீங்கும் என்று பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது.
விரத முறைகள்
“காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை” என்று கூறுவார்கள். மகத்துவம் வாய்ந்த இந்த வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முன் தினமான தசமி தினத்தில் வீட்டை கழுவி சுத்தம் செய்வது நல்லது. அந்த தசமி தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் அருந்திவிட்டு ஏகாதசி விரதம் இருக்க தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தில் அதிகாலை வேளையான 3 முதல் 4 மணிக்குள்ளான பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பியதும் அந்நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரை தீர்த்தமாக அவ்வப்போது அருந்தலாம். முதியோர்கள், உடல் பலவீனமானவர்கள் பெருமாளுக்கு நிவேதித்த பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம். இந்நாள் முழுவதும் பெருமாளின் சிந்தனை மற்றும் தியானத்தில் இருந்து மௌன விரதமும் கடைபிடித்தால் ஏகாதசி விரதத்தின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.