
இதைபோல ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் உள்பட முக்கிய நாட்களிலும் ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை திறக்கப்பட்டிருந்தது.
ஏராளமான பக்தர்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 13-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி சபரிமலை கோவில் நடை இன்று (16-ந்தேதி) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும். வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது.
மீண்டும் நாளை அதி காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விஷேச பூஜைகள் நடத்தப்படும்.
வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.
புரட்டாசி மாதத்தில் சுவாமி ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். இருமுடி கட்டி சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து உள்ளது.
கோவில் நடைதிறப்பையொட்டி சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.