
உண்ணாவிரதம், உடலை பட்டினி போட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மௌன விரதம், மனதை பட்டினி போட்டு, மன எண்ணங்களை மேம்படுத்துவது! மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும். ஆழ்நிலையில் மௌனமாக இருப்பதே, மௌன விரதம்!. பேசிப் பயனிலா சூழலில், மௌனமாக இருப்பது, சிறந்த தீர்வாகும். மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர். திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.
முதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள். மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். இதனால் என்ன நடக்கும்? அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும். இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் கிடைக்கும்.
மௌன விரதம், நம்மை நாம் ஆராய, நாம் இதுவரை வாழ்ந்த வாழ்வில் நாம் அடைந்தவை என்ன, இனி அடையவேண்டிய இலக்கு என்ன என்பதை, எந்தவித சமரசமும் இல்லாமல், உண்மை நிலையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். நம் வாழ்வு இலக்கில் இருந்து விலகிச்செல்வதை அறிந்தால், இலக்கை ஒட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பாகும்.