
அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டி 301-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கரயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 301-வது பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர் பொன்.பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன.
முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக செங்கல்பட்டு உயர் மறை மாவட்ட மேதகு டாக்டர் நீதிநாதன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டத்தை பங்கு தந்தையர்கள், பாளையக்காரா் பொன்.பாலதண்டாயுதம் ஆகியோர் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.