
இதையொட்டி இரவு 11.45 மணி அளவில் திருப்பலி தொடங்கியது. இதில் முன்னுரை வாசித்தல், பாவமன்னிப்பு வழிபாடு நடந்தது. அதன்பின் நள்ளிரவு 12 மணி அளவில் உன்னதங்களிலே பாடல் பாட கிறிஸ்துபிறப்பு நிகழ்வுகள் நட்சத்திரங்கள் ஒளிர பீடத்தின் முன்பு நடந்தது.
அதைத்தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, ஆயரின் மறையுரை, மன்றாட்டு, நற்கருணை வழிபாடு, இயேசு பாலன் ஆசி வழங்குதல் நடைபெற்று திருப்பலி நிறைவு பெற்றது. அதன்பின் ஒருவருக்கொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி, முத்தழகுபட்டி, குமரன் திருநகர் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் அந்தந்த பங்குத்தந்தையர்கள் தலைமையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை தலைமை போதகர் டேவிட்சன் பால்ஜேக்கப் தலைமையில் அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது.
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி, ரவுண்டுரோடு, முத்தழகுபட்டி, பஞ்சம்பட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் ஆராதனை அந்தந்த போதகர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் டி. இ.எல்.சி. திருத்துவநாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை சபைகுரு காருண்யா தலைமையிலும், வெள்ளோடு அம்மாபட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.இ.எல்.சி. தேவாலயங்களிலும் அந்தந்த சபை குரு தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.