
இன்றைய ராசி பலன்கள்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். பூர்வீகசொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.
வார பலன்கள்
டிசம்பர் 16-12-2019 முதல் 22-12-2019 வரை:
இரண்டு, ஒன்பதுக்குடைய ராஜ யோகாதிபதி எட்டாமிடத்தில் புதனுடன் இணைந்து தனஸ்தானத்தைப் பார்க்கும் யோக வாரம் இது. செவ்வாயின் இந்த நிலை மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் இந்த வாரம் முழுமையும் மீனத்திற்கு நன்மை தருவதாக அமையும். சிலருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் உறவு, நட்புகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு நேரம் கை கொடுக்கும்.
எதிர்பார்த்த பாகப் பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். பூர்வீக சொத்து ஒன்றும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 21ந்தேதி காலை 8.28 மணி முதல் 23ந்தேதி காலை 11.52 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்குவாதமோ செய்ய வேண்டாம்.
ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888
தமிழ் மாத ஜோதிடம்
17-11-2019 முதல் 16-12-2019 வரை
விகாரி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் 10-ம் இடத்தில் சொந்த வீட்டில் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவரோடு இணைந்து சனி, கேது ஆகிய கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. 10-ம் இடம் `தொழில் ஸ்தானம்' என்றும், `கர்ம ஸ்தானம்' என்றும் அழைக்கப்படுகிறது. எனவே 10-ல் குரு வருவதால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள் உறுதியாவதற்கான அறிகுறிகள் தென்படும். வரும் மாற்றங்களை நீங்கள் தவிர்க்க இயலாது. நீண்ட தூரப் பயணங்களாகவும் இருக்கலாம். மிக அருகாமையிலுள்ள இடமாகவும் இருக்கலாம். மிகுந்த யோகமானவர்கள் திசாபுத்தி பலம் பெற்றவர்களாக இருந்தால் பணிபுரியுமிடத்திலேயே இலாகாமாற்றங்கள் அல்லது உட்காரும் இடத்திலேயே இடமாற்றங்கள் ஏற்படலாம்.
அதே நேரத்தில் 10-ல் சனி இருப்பதால் பெற்றோர் களின் ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்கலாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும். அதே போல் சுயதொழில் செய்பவர்களுக்கு பழைய பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்பட்டு அவர்களை விலக்கிவிடும் நிர்ப்பந்தம் ஏற்படலாம். தொழிலில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவைப்படும் நேரம் இது. ஒரு சிலருக்கு கவனத்துடன் செயல்பட்டால் ஓரளவு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஏட்டில் லாபம் இருக்குமே தவிர எதிரில் வந்து சேராது. எனவே கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் மிகுந்த கவனமுடன் இருந்தால் தான் ஆதாயத்தை அங்கீகரித்துக் கொள்ள முடியும்.
9-ம் இடத்தில் சூரியனும், சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். செவ்வாய் வீட்டில் சுக்ரனும், சுக்ரன் வீட்டில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பரிவர்த்தனை யோகமும் பெறுகிறார்கள். யோகங்களில் சிறப்பான யோகம் பரிவர்த்தனை யோகமாகும். ஆனால் அதே நேரம் 8-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன் 9-ம் இடத்திலும், 9-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 8-ம் இடத்திலுமாக சஞ்சரிக்கிறார்கள். எனவே பெற்றோர் வழியில் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். சிலருக்கு சொத்து விற்பனையின் மூலம் வரவேண்டிய தொகை வராமலும் போகலாம். இருப்பினும் உடன்பிறப்புகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
இம்மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகைத் திருநாள் வருவதால், அன்றைய தினம் கவச பாராயணம் செய்து வெற்றி வடிவேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து குவியும்.
தனுசு சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நவம்பர் 22-ந் தேதி உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரப்போகிறார். அங்குள்ள குருவோடு பகை கிரகமான சுக்ரன் இணையும் பொழுது, முரண்பாடான பலன்கள் நடைபெறும். நடக்காது என்று நினைத்த காரியங்கள் நடைபெறும். நடைபெறும் என்று நினைத்த காரியங்கள் தாமதப்படலாம். என்னயிருந்தாலும் குரு வீடு என்பதால் குருவழிபாட்டை மேற்கொண்டால் கூடுதல் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரலாம்.
விருச்சிக புதன் சஞ்சாரம்
இதுவரை மாதத் தொடக்கத்தில் துலாம் ராசியில் புதன் சஞ்சரித்து வந்தார். அவர் டிசம்பர் 3-ந் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 4-க்கு அதிபதி 9-ல் வரும்பொழுது உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெற வேண்டும். எனவே நீண்ட நாட்களாக பேசிப்பேசி விட்டுப்போன சுபகாரியப் பேச்சுக்கள் இப்பொழுது நல்ல முடிவிற்கு வரும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண காரியம் முதல் கட்டிடம் கட்டும் பணி வரை சுபச்செலவுகளாக வந்து கொண்டேயிருக்கும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்பட்டுப் புதிய வாகனம் வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள். என்னயிருந்தாலும் புதனுக்குரிய தெய்வமாக விளங்கும் மகா விஷ்ணுவையும் அவரது துணைவியான மகாலட்சுமியையும் வழிபட்டால் மனக்கவலை மாறும். பணக்கவலையும் தீரும். புதன் மாமன்காரகன் என்றும், கல்விக்குரியவன் என்றும் கருதப்படுவதால் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் சிறப்பாக இருக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
இம்மாதம் தினந்தோறும் விநாயகப் பெருமானையும், வியாழன் தோறும் குருபகவானையும் வழிபட்டு வருவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 26, 27, 28 டிசம்பர்: 2, 3, 8, 9, 13, 14, 15
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
பெண்களுக்கான பலன்கள்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இதுவாகும். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். வரவை மீறிய செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக அமையாது. சேமிப்பில் சிறிது கரையலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அதனால் ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொள்ள இயலும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். தாய்வழித் தனலாபம் திருப்திகரமாக இருக்கும். சகோதர வர்க்கத்தினர் உங்களை அனுசரித்துச் செல்வார்களா என்பது சந்தேகம் தான். இடம், பூமி வாங்குவதாக இருந்தால் பத்திரப் பதிவில் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரலாம். பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளிடம் சலுகைகளை எதிர்பார்க்க இயலாது. வராகி வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும். மாதக் கடைசியில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும்.
ஆண்டு பலன் - 2019
விகாரி வருட பலன்
மீன ராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ் புதுவருடமான விகாரி ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை தருவதாகவும் இருக்கும்.
புதிதாகப் பிறக்க இருக் கும் தமிழ்ப்புத்தாண்டான விகாரி வருடத்தில் மீன ராசிக்கு சிறப்பான அம்சங் கள் என்னவென்று பார்த்தோமேயானால், ராசிக்கு பத்தாமிடத்தில் இரு பெரும் பாபக்கிரகங்களான கேதுவும், சனியும் ஒன்றுகூடி சில மாதங்களுக்கு நிலை கொண்டிருக்கப் போவது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
பாபக்கிரகங்கள் உபஜெய ஸ்தானங்கள் எனப்படும் மூன்று, ஆறு, பத்து, பதினொன்றில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கேதுவும், சனியும் ஒன்று சேர்ந்திருப்பது மீன ராசிக்கு நல்லது. இந்த அமைப்பு தொடர்ந்திருக்கும் காலம் வரைக்கும் உங்களுக்கு யோகமான கால கட்டமாக அமையும்.
மீன ராசிக்காரர்கள் எதிலும் நடுநிலை கொண்ட நேர்மையானவர்கள் என்பதாலும், எந்த ஒரு வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வீர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் இனிமேல் நல்லபடியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.
பொதுவாக மீனத்தினர் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.
புது வருடத்தின் பிற்பகுதியில் நவம்பர் மாதம் வரவிருக்கும் குருப்பெயர்ச்சி காலம் உங்களுக்கு மாற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த மாறுதல்கள் அனைத்தும் ஏற்கனவே இருக்கும் நிலையைவிட உயர்ந்த நிலையைத்தான் தரும்.
விகாரி வருடத்தின் பிற்பகுதியில் உங்களின் எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்கும். தற்போது இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில் வெளியே அனுப்பும். அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்து எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகு நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.
எனவே புது வருட இறுதியில் எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் நடக்கும். கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.
இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த மீன ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை இந்த வருடத்தில் இருந்து காண்பீர்கள். வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும்.
வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவை கள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.
இளையபருவத்தினருக்கு இந்தப் புதுவருடம் யோகத்தைத் தரும் என்பதோடு மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங் களையும் விரட்டி அடிக்கும் வருடமாகவும் அமையும். இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.
வியாபாரிகளுக்கு லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.
அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.
கேது, சனியுடன் இருப்பதால் சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
ராகு கேதுக்களின் சுபத்துவ நிலையினால் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.
சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.
வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும்.
இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம். வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பெண்களுக்கு இந்த வருடத்தில் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் கிடைக்கும். நவம்பருக்குப் பிறகு குருபகவான் பத்தாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
மொத்தத்தில் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மீனத்திற்கு கவலைகளைப் போக்கும் ஒரு ஆண்டாக இருக்கும்.
ஆதித்ய குருஜி
செல்: 88709 98888
சனிப்பெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
மீன ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குரு தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், தடைகளை ஏற்படுத்தினாலும் ராசிநாதனே தொழில் ஸ்தானாதிபதியுமாகி ஆட்சி நிலை பெறுவதால் முடிவில் அனைத்தும் விலகி வேலை, தொழிலில் லாபமும் பணவரவும் இருக்கும். முக்கியமாக குருவே உங்கள் ராசிநாதன் என்பதால் நிச்சயமாக உங்களுக்கு கெடுபலன்கள் இருக்காது.
அதேநேரத்தில் மிக முக்கிய ஒரு பலனாக இன்னும் சில வாரங்களில் வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இது மீனத்திற்கு மிகுந்த நன்மைகளை தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். ஆகவே இந்தக் குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம் இருக்கும். எனவே இதுவரை அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி எல்லாவற்றிலும் சந்தோஷம் கிடைக்கும் ஒரு காலம் ஆரம்பமாக இருக்கிறது.
2020ம் ஆண்டு மீன ராசியினர் உழைப்பை நம்ப வேண்டிய காலமாக இருக்கும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.
தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலைமைகள் இப்போது முன்னேற்றமாக இருக்கும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகை இப்போது கைக்கு வரும்.
சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.
பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.
குரு தான் இருக்கும் வீட்டை விட, பார்க்கும் வீட்டையே பலப்படுத்தி நன்மைகளைத் தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பத்தில் அமரும் குரு தனது புனிதப் பார்வையால் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் வலுப் பெறும்.
குருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.
அம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.
குரு நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.
குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.
மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.
உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.
தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.
சனி நல்ல அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலருக்கு அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.
ராசிநாதனின் வலுவால் சிலர் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.
அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.
வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.
குரு பத்தில் அமர்வதால் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மொத்தத்தில் நல்லபலன்கள் அதிகம் உள்ள பெயர்ச்சியாக இது இருக்கும்.
பரிகாரங்கள்:
குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமை குரு ஹோரையில் குருவை நிகர்த்த பெரியோர்களை சாஷ்டாங்கமாக வணங்கி ஆசி பெறுங்கள்.
ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்
மீன ராசிக்கு இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்து பிள்ளைகள் விஷயங்களில் மன வருத்தங்களையும், நிம்மதியற்ற நிலைகளையும், அதிர்ஷ்டக் குறைவையும் கொடுத்துக் கொண்டிருந்த ராகு தற்போது நான்காமிடத்திற்கு மாறுவது உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய அமைப்பு.
அதேநேரத்தில் இதுவரை லாபஸ்தானம் எனப்படும் பதினோராமிடத்தில் இருந்து உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை கொடுத்து வந்த கேது பத்தாமிடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். இது சாதகமான பலன் தரும் அமைப்பு அல்ல.
பொதுவாக நம்முடைய மூலநூல்களில் கேந்திர ஸ்தானங்களில் அமரும் ராகு - கேதுக்கள் அந்த வீட்டின் பலனைக் கெடுத்து தங்களின் பலன்களைத் தருவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதன்படி தற்போது நான்காம் வீட்டிற்கு மாறும் ராகுவால் உங்களுக்கு வீடு, வாகனம், தாயார், கல்வி ஆகிய விஷயங்களில் பின்னடைவுகள் இருக்கும் என்றாலும் வரும் நவம்பருக்குப் பிறகு ராகு குருவின் பார்வையைப் பெறப் போவதால் சாதகமற்ற போக்குகள் எவ்வித பாதிப்புகளையும் தராது.
நான்காமிட ராகுவால் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் மீன ராசிக்காரர்களின் வயது, தகுதி, வாழ்க்கைமுறை, இருக்கும் நாடு ஆகியவற்றைப் பொறுத்து வீடு, வாகனம், தாயார், கல்வி, தன்சுகம் எனப்படும் ஆரோக்கியம் ஆகியவற்றில் சில பின்னடைவுகள் ஏற்படும்.
இதுவரை நல்ல வீட்டில் இருந்தவர்கள் சற்று வசதிக் குறைவான வீட்டிற்கு மாறுவீர்கள். வீட்டினை அடமானம் வைத்து தொழில் செய்பவர்கள், வீட்டின் பேரில் பணப்பிரச்னைகள் மற்றும் வங்கிக்கடன் உள்ளவர்கள், வீட்டின் மீது நீதிமன்ற வழக்குகள் இருப்பவர்கள், வீடு சம்பந்தமான பாகப்பிரிவினை சிக்கல்கள் உள்ளவர்களுக்கு நான்காமிட ராகுவினால் பாதிப்புகள் இருக்கும்.
மேலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் புதிதாக வீட்டுப்பத்திரத்தை ஈடாகவோ, அடமானமாகவோ வைத்து தற்போது புதிதாக தொழில் ஆரம்பிக்க வேண்டாம். இந்தப் பெயர்ச்சி நடக்கும் முன்பே சில மாதங்களுக்கு முன்பு வீட்டினை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இந்த ஒன்றரை வருட காலங்கள் மிகவும் கவனமுடன் பங்குதாரர்களை நம்பாமல் சிக்கனமுடன் தொழில் செய்வது நல்லது.
அடுத்து வாகனவிஷயங்களில் செலவுகளும், விரையங்களும், மாற்றங்களும் இருக்கும் என்பதால் புதுவாகனம் வாங்கும் போதோ, இருக்கும் வாகனத்தை மாற்றும் போதோ அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது.
வயதான தாயாரைக் கொண்ட வர்கள் அவரின் ஆரோக்கியத்தின் மேல் விழிப்புடன் இருங்கள். தாயாரால் விரையங்கள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. குறிப்பிட்ட சிலருக்கு தாயாருடன் மனக்கசப்புகளும், தாயாரைப் விட்டு பிரிதலும், பெற்றோரை விட்டு தூர இடங்களில் அல்லது வெளி நாடுகளில் பணிபுரிவது போன்ற பலன்கள் இப்போது நடக்கும்.
சிலருக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அக்கறை எடுத்து படித் தாலும் மதிப்பெண் கிடைப்பது கடினமாக இருக்கும். கல்வியில் தடை வரும். பருவவயதுக் குழந்தைகளுக்கு படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் ஆர்வமும், நாட்டமும் இருக்கும் என்பதால் பதின்பருவத்தில் இருக்கும் மீனராசிக் குழந்தைகளை பெற்றோர்கள் அக்கறையுடன் கவனிப்பது நல்லது.
பத்தாமிடத்திற்கு கேதுபகவான் மாறினாலும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு குருவோடு இணைவதால் தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சங்கடங்கள் எதுவும் வந்து விடாது. மேலும் சர்ப்பக்கிரகங்களில் ராகுதான் வலிமையானது என்றும் தலை என்றும் சொல்லப்படுவதாலும் கேது வலிமையற்ற வால் போன்றதுதான் என்பதாலும் பத்தாமிடத்தில் ராகு இருந்தால் மட்டுமே ஜீவன அமைப்புகளில் தொந்தரவுகள் வரும் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.
எனவே இந்தமுறை கேது தொழில் ஸ்தானத்திற்கு இடம் பெயருவதால் வேலை தொழில் வியாபாரம் போன்றவை பாதிக்குமோ என்று மீனராசிக்காரர்கள் கவலைப்படத் தேவையில்லை.
உங்களில் சிலர் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப்படுவீர்கள்.
மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
உறவினர்களிடம் சுமுக உறவு தடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் எதுவும் இந்த வருடம் செய்ய வேண்டாம். சொத்துப் பிரிவினை, நிலப்பிரச்னைகள் போன்றவற்றில் கவனமாக இருங்கள்.
இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு குருபலம் இருப்பதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். மீன ராசிக்காரர்கள் வீட்டில் இந்தப் பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு. மேலும் ராகுகேதுக்கள் இம்முறை புத்திரகாரகனாகிய குருவுடன் சம்பந்தப்படுவதால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிலும் ஒரு விஷேச நிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.
அதுபோலவே முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை தற்பொழுது நல்ல விதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.
யூக வணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.
யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு நல்ல உதவியால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும். வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
பரிகாரங்கள்
வேலூர் வாலாஜா பேட்டையில் அமைந் திருக்கும் ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நடைபெறும் யாகத் தில் கலந்து கொள்ளுங்கள். அங்கே மகான் கயிலை ஞானகுரு ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமி களால் ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட ராகு கேதுக்களை வணங்கி முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். மேலும் அன்னை மீனாட்சியின் தவப்புதல்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் அருள் பொழியும் திருமுகத்தை தரிசியுங்கள். அனைத்து பிரச்னைகளும் பஞ்சாய் பறந்து போகும்.
கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888