
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
15.1.21 முதல் 21.1.21 வரை
சுக்கிரன், செவ்வாய், ராகு, கேது சாதகமான பலன் தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மிருகசீரிடம் 3,4: நுணுக்கமான விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பப்பணிகளை முடிப்பதில் தடுமாறினாலும் நன்கு முடிப்பீர்கள். விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும்.
திருவாதிரை: வீடு பழுதுபார்க்கும் வேலை நன்கு முடியும். நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்வது அவசியம். சிறிய அளவில் திருப்தி ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வியாபாரத்தில் இருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும்.
தமிழ் மாத ஜோதிடம்
ஆண்டு பலன் - 2021
அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான மிதுனத்தினர் தற்போது சாதகமற்ற பலன்களை அனுபவித்து வருகிறீர்கள். குறிப்பாக முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கும், நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நெருக்கடிகளும், பணம் இல்லாத நிலைமையும் இருந்து வருகிறது.
எட்டில் இருக்கும் சனிபகவானால் தொழில், வேலை அமைப்பில் முன்னேற்றம் இல்லாத நிலை இருக்கும் என்பது ஜோதிடவிதி. பெரும்பாலான மிதுனத்தினருக்கும் இதுபோன்ற பலன்களே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பிறந்த ஜாதகவலு மற்றும் யோக தசாபுக்திகள் நடப்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக துன்பங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறீர்கள். சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களின் சங்கடங்கள் அனைத்தும் இறுதிப்பகுதியில் விலகும் வருடமாக இந்த புத்தாண்டு இருக்கும்.
வருடம் முழுவதும் அஷ்டமச் சனி அமைப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது
அஷ்டமச்சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத் தரும் என்பதால் இளைய பருவ மிதுன ராசிக்காரர்களைப் பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.
அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் அதிசார குருமாற்றம் உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே நடக்க இருக்கும் எதையும் எதிர்மறையாகப் பார்க்காமல் சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.
இளைய பருவத்தினர் இந்த வருடம் மட்டும் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். என்னதான் இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு சனி யோகாதிபதி என்பதால் மிகப்பெரிய கெடுதல்கள் எதையும் கண்டிப்பாக செய்யவே மாட்டார். எனவே அஷ்டமச் சனி தாங்க முடியாத கெடுபலனைச் செய்யுமோ என்று கவலைப்பட வேண்டாம்.
ஆயினும் பணத்தின் அருமையை உங்களுக்கு சனிபகவான்தான் புரிய வைக்க வேண்டும் என்பதால் வெயிலில் இருக்கும் போதுதான் நிழலின் அருமை தெரியும் என்ற பழமொழியின்படி இந்த வருடம் பணத் தட்டுப்பாட்டினையும், பொருளாதாரச் சிக்கல்களையும் கடன் வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமையையும் உருவாக்குவார்.
எனவே எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிதாக எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால் மட்டும் போதும்.
இதுபோன்ற நேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி 1 லட்சம் போட்டால் 10 லட்சம் எடுத்துவிடலாம் என்றோ, வெறும் 10 ஆயிரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம் என்றோ சில தூண்டில்களை போட்டு ஒரு தொழில் ஆரம்பிக்க வைத்து அல்லது உங்களை புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார்.
பிறகு அதனை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி பரிதவிக்க வைப்பார் என்பதால் இந்த வருடம் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ, இதுவரை தெரியாத ஒரு தொழிலை பற்றி தெரிய வந்தாலோ கவனமாக இருங்கள்.
இன்னொரு சிறப்பு பலனாக உங்களில் சிலர் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு சென்று பொருள் சம்பாதிப்பீர்கள். இதுவரை வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ இருந்த தடை நீங்குகிறது. அயல்தேசத்தில் செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கும்.
வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.
மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.
பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
தொழிலாளர்களுக்கும் வேலைசெய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு. விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். குறிப்பிட்ட சிலர் சனியின் ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும்.
பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும்.
யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். பேராசை பெருநஷ்டம் போன்ற நிலைமைகள் இப்போது இருக்கும் என்பதால் ஸ்பெகுலேஷன் துறை பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். அதேபோல வட்டித்தொழில் செய்பவர்கள் கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு தகுதியற்ற நபர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள். கொடுத்த பணம் திரும்பி வராது.
பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.
பெண்களுக்கு நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும்.
சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
நிறைவாக மிதுன ராசிக்கு ஆரம்பத்தில் கவனமாக இருக்க வைத்து பிற்பகுதியில் நல்லவை நடக்கும் வருடமாக இது இருக்கும்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத் தொடக்கத்தில், ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்திருக்க சர்ப்பக் கிரகத்தின் பிடியில் இருக்கிறீர்கள். அதே நேரம் கண்டகச் சனியும், அஷ்டமத்தில் செவ்வாய், குரு சேர்க்கையும் இருக்கிறது. விரயாதிபதி சுக்ரன் பலம்பெற்று விரய ஸ்தானத்திலேயே இருக்கிறார். ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று வலிமையிழந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை, மனநிம்மதிக் குறைவு, ஆரோக்கியத் தொல்லை, பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் சிக்கல், திருப்தியளிக்காத பயணம், வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் தடுமாற்றம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
ராகு-கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று முதல் 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவுமாக உலா வரப்போகிறார்கள். கேதுவால் ஆரோக்கியப் பாதிப்புகள் வரலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். உலுக்கி எடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். தெளிவாக முடிவெடுப்பீர்கள். சுபகாரியத் தடைகள் அகலும். சுற்றத்தார் போற்றும் விதத்தில் வாழ்க்கை அமையும். அதற்கு நிதானத்தோடு செயல்படுவது அவசியம். யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்யுங்கள்.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று மகர ராசிக்குக் குருபகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு நீச்ச வீடாகும். குருவின் பார்வையை பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வாருங்கள். புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் அதி கரிக்கும். கடன் பிரச்சினை படிப்படியாக தீரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட தொல்லை அகலும். முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்க ரீதியாகச் சனிபகவான் பெயர்ச்சியாகி நடக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு அஷ்டமத்துச் சனி தொடங்கிவிட்டது. அஷ்டமத்து சனியால் அனைவருக்கும் கஷ்ட- நஷ்டங்கள் ஏற்படும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை, அஷ்டமாதிபதியாகவே சனி விளங்குவதால், பெரிய பாதிப்பு இருக்காது. தடைகள் இருப்பினும், கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். அதோடு குருபகவானும் சனியுடன் இணைந்திருப்பதால், சனியின் கடுமை குறையவே செய்யும். இந்த காலகட்டத்தில் நிதானமாக முடிவெடுப்பது நன்மைகளை வழங்கும்.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் அதிசாரமாகவும், வக்ரம்பெற்றும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியிலேயே அவரோடு இணைந்திருக் கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இதனால் வரும் மாற்றங்கள், நல்ல மாற்றங்களாகவே அமையும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உள்ளத்திலும், உடலிலும் சோர்வு ஏற்படும். சேமிப்பு கரையும்.
வழிபாடு
ஏகாதசி திதியன்று விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்து வாருங்கள்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
அஷ்டமத்தில் வருகிறது சனி, அமைதிதான் தேவை இனி!
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, 8-ம் இடம் சனிக்கு ஆட்சி வீடாகவும், சொந்த வீடாகவும் இருக்கின்றது. எனவே விரயங்கள் ஏற்பட்டாலும், சுப விரயங்களே அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இயற்கையாகவே வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை கொடுத்தாலும் மீண்டும் கடன் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் மனதிற்கு ஏற்ற விதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாகனங்களாலும் தொல்லை ஏற்படும். இதை ஒரு சோதனைக் காலமாகக் கூடக் கருதலாம். இருந்தாலும் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களில் அதன் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால், குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும்.
சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களாக சுய முடிவடுத்து ஏதேனும் காரியங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க நேரிடும். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய தொழிலில் அக்கறை செலுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருந்த உடன்பிறப்புகள் விலகக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்குவதால் தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, துரித கதியில் முன்னேற்றங்கள் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். அங்ஙனம் சஞ்சரிக்கும்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மாறுகின்றது. எனவே இல்லம் தேடி இனிய பலன்கள் வரப்போகின்றது. அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைக்கப் போகின்றது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் தடைகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றங் கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்பொழுது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், வியாபார விருத்தி ஏற்படும். இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
எட்டில் வந்தது குரு பகவான், எதிலும் கவனம் இனி தேவை!
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 8-ம் இடத்திற்கு செல்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் தொடங்குகின்றது. மேலும் 8-ம் இடத்திற்கு வரும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும்பொழுது, யோகத்தை வழங்கும்’ என்பது நியதி. எனவே, அஷ்டமத்து குருவால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் திடீர் இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள், பிள்ளைகளால் பிரச்சினைகள், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத நிலை போன்றவை ஏற்படலாம். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வரும். இடர்பாடுகள் ஏற்படுமேயானால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான், உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். அதே சமயம் விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால் வீண் விரயம் ஆகாமல் சுபவிரயமாகவும் அமைத்துக்கொடுக்கும். இல்லற வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது முதல் இல்லம் கட்டிக் குடியேறும் அமைப்பு வரை, சுபகாரிய நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் வல்லமை குருவின் பார்வைக்கு உண்டு. பற்றாக்குறை பட்ஜெட் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றமும் கிடைக்கலாம். கூட்டுக்குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டு. அதைப் பராமரிக்கும் சூழ்நிலையும் உருவாகும். குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சகோதர வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்திற்கு அதிபதியானவர் சூரியன். அதாவது சகோதர சகாய ஸ்தானத்திற்கு அதிபதி. அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். இதுவரை விலகி இருந்த உடன்பிறப்புகள் தானாக வந்து இணையலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியாவார். 2-ம் இடம் என்பது தன ஸ்தானம் ஆகும். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். பகல், இரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மனக்கலக்கம் அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள், இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக செவ்வாய் சாரத்தில் சஞ்சரிப்பதால், சில மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். உத்தியோகத்தில் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உருவாகலாம். சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தை முன்னதாகவே சொல்லப்போய் அதனால் பிரச்சினைகள் உருவாகும். உடல் நலனிற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. தொழிலில் நம்பிக்கைக்குரியவர்கள் அமைய மாட்டார்கள். ‘எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்புகளாலும் பிரச்சினை, உடன் இருப்பவர்களாலும் பிரச்சினை ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நில விற்பனை சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம், கவனம் தேவை.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை உங்கள் ராசியில் பதிந்து ராசியைப் புனிதப்படுத்துகின்றது. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு தேடி வந்து கொண்டேயிருக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். குருவின் பார்வை 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை, குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதைச் செய்தாலும் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்கள் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். தொழிலில் பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடனை திருப்பிக் கேட்பதன் மூலம் உறவினர் பகை உருவாகிவிடும். பணியாளர்களும் திடீர் திடீரென விலக நேரிடும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
கடந்த முறை நடந்த ராகு-கேது பெயர்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராசிகளில் மிதுனமும் ஒன்று.
அதிலும் உங்கள் ராசியில் ராகு தனது சொந்த நட்சத்திரமான திருவாதிரையில் இருந்த நிலையில், இன்னொரு பாப கிரகமான சனியும் எட்டாமிடத்தில் அஷ்டம சனி என்ற நிலைமையில் இருப்பதால் கடந்த காலங்களில் மிதுன ராசிக்காரர்கள் சற்று திணறித்தான் போனீர்கள்.
ராசியில் சென்றமுறை ராகு அமர்ந்ததால் பெரும்பாலான மிதுனராசிக்காரர்களுக்கு உடல், மன பாதிப்புகள் இருந்தன. உங்களில் பலருக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் மன அழுத்தம் இருந்தது. மிதுனத்தினரின் சொந்த வாழ்க்கை நன்றாக இல்லை. வேலைகளில் சங்கடங்கள் இருந்து வந்தன. வேலைப்பளுவும் அதிகமாக இருந்தது. பலர் பிடித்தம் இல்லாத வேலையை நிர்பந்தத்திற்காக செய்ய வேண்டிய நிலை இருந்தது.
சிலருக்கு வேலையே இல்லாத நிலை இருந்தது. தொழில் சரியாக அமைய வில்லை. அமைந்த தொழிலும் உருப்படியாக இல்லை. வியாபாரத்தில் குழப்பம், மேலதிகாரி தொல்லை என்று மிதுனத்தினர் அடைந்த துன்பங்கள் ஏராளம்.
ஒரு இருள் கிரகம் உங்கள் ராசியின் மேல் அமர்ந்ததால் பல மிதுனத்தினரின் செயல்திறன் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. சில நிலைகளில் உங்களால் ஒரே ஒரு விஷயத்தை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தால் சிலர் தவித்துப் போனீர்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் ஒரு முட்டுச்சந்தின் மேல் முட்டிக் கொண்டு முன்னே போக முடியாமலும், பின்னே திரும்ப முடியாமலும் இருப்பது போன்ற ஒரு வினோதமான நிலைமையும்ராகுவினால் இருந்து வந்தது.
தற்போது நடைபெற இருக்கும் பெயர்ச்சியின் மூலம் ராகு-கேதுக்கள் நன்மைகளை தரக்கூடிய 6, 12-ம் இடங்களுக்கு மாறுகிறார்கள். இனிமேல் அந்த நிலை உங்களுக்கு இருக்காது.
வரும் ராகு கேது அமைப்பு உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கக் கூடியதாகும். இப்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் கடந்த 2 வருடங்களாக மிதுனத்திற்கு இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கி நல்ல மாற்றம் உருவாகும்.
இதனால் மிதுன ராசிக்காரர்களின் தொழில் நிலைமைகளில் இதுவரை இருந்து வந்த “கிணற்றில் போட்ட கல்” போன்ற நிலைமை இனிமேல் இருக்காது. அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை இனிமேல் இருக்காது.
ராசியில் இருந்து ராகு வெளியேறுவதால் உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். செயல்திறன் கூடும். இதுவரை இருட்டான குகைக்குள் இருந்தது போன்ற நிலைமை மாறி வெளிச்சத்திற்கு வருவீர்கள். முகத்தில் பொலிவு தெரியும். உங்களை அறியாமலேயே உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
ராசியின் மேல் இருந்த ஒரு இருட்டு விலகுவது, உங்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்பதால் மிதுன ராசிக்காரர்கள் அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் உங்கள் விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் இருந்து வந்த தடைகள் விலகுவதை காணலாம்.
ராகுவின் எதிர்முனை கிரகமான கேது 6-மிடத்திற்கு மாறுவதால் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் உங்களுக்கு அடி பணியும். கேது 6-மிடத்தில் அமர்வது கடன், நோய்கள் அற்ற வாழ்வை தரும் என்பதால் இதுவரை கடன் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் நல்ல பணவரவு வந்து கடனை அடைப்பீர்கள்.
ஆறாம் வீடு விருச்சிகமாகி அங்கே இருக்கப் போகும் கேதுவால் சுப வலிமை அடைவதால் அந்த பாவகத்தின் கடன், நோய், எதிர்ப்பு ஆகிய தன்மைகள் இனி குறையும். எனவே அதிகமான கடன் தொல்லை, ஆரோக்கியப் பிரச்னைகளில் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பிறக்கும்.
உங்களின் பிறந்த ஜாதகத்தில் தசா புக்திகளும் ஒத்துழைத்தால் வர இருக்கும் ஒன்றரை வருடத்திற்குள் கடன் இல்லாத நிலைமையை அடைய முடியும் எனும் அளவிற்கு உங்களின் பொருளாதார உயர்வு நன்றாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் மிதுன ராசிக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி நற்பலன்களை மட்டும் தர இருக்கின்றது என்பது உறுதி.
பரிகாரங்கள்
சென்னையில் இருப்பவர்கள் மேடவாக்கம் சேலையூருக்கு அருகில் உள்ள மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும் சரபேஸ்வரர் வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெறுங்கள். மற்றவர்கள் அருகிலுள்ள ஆலயங்களில் அதேநேரத்தில் வழிபடலாம்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)