
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
19.2.2021 முதல் 25.2.2021 வரை
உங்களது அன்றாட பணிகளில் வெற்றிகள் குவியும். தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். உறவுகளிடையே இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்கள் அலைச்சல் தரும். இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.
தமிழ் மாத ஜோதிடம்
பிப்ரவரி மாதம் 13-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 13-ம்தேதி வரை
மகர ராசி நேயர்களே!
சார்வரி வருடம் மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு விரயாதிபதி குருவும் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் தொடர்பாக புதிய முடிவு எடுப்பீர்கள். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
கூட்டுக்கிரக சேர்க்கை
உங்கள் ராசியிலேயே நான்கு கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. குறிப்பாக ஜென்மச் சனி, ஜென்ம குரு, ஜென்ம புதன், ஜென்ம சுக்ரன் என்று இருக்கும்போது நன்மைகள் நடைபெறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். எந்த வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யக்கூடிய நிர்ப்பந்தம் உருவாகும். 3, 12-க்கு அதிபதியான குருவின் ஆதிக்கம் இருப்பதால் உடன் பிறப்புகளின் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், எதையும் மேலிடத்தைக் கேட்டுச் செய்வது நல்லது.
மகர புதனும், கும்ப புதனும்
மாதத் தொடக்கத்தில் மகர ராசியில் புதன் சஞ்சரிக்கின்றார். வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். பிப்ரவரி 14-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் புதன். அவர் ஜீவனம் சிறப்பாக இருக்க வழிகாட்டுபவர். தந்தை வழியில் தகுந்த ஆதரவு கிடைக்கும். மார்ச் 7-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்வதால் வாங்கியக் கடனை கொடுத்து மகிழ்வீர்கள். பதவியில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நபர்களிடம் சொல்லி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர்.
ரிஷப செவ்வாயின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பிப்ரவரி 18-ந் தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குச் செல்கின்றார். எனவே இக்காலத்தில் எதிர்பாராத விதத்தில் சில நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். தடைபட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
மகர குருவின் சஞ்சாரம்
மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிப்பது ஒருவழிக்கு நன்மைதான். சனியோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோக அமைப்பிலும் விளங்குகிறார். அதே நேரத்தில் பிப்ரவரி 21-ந் தேதி குரு அஸ்தமன நிவர்த்தியாவதால் உங்கள் ராசியைப் பொறுத்தவரை எதிர்பார்த்த நற்பலன்கள் நடைபெறும். சகோதர சச்சரவுகள் அகலும். ‘வாகனங்களை மாற்றலாமா?’ என்ற எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
கும்ப சுக்ரனின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், பிப்ரவரி 22-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்பொழுது விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். அதுமட்டுமல்லாமல் கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பும் ஒருசிலருக்கு கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 14, 17, 18, மார்ச்: 1, 2, 4, 5, 6, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களாலும், மேலதிகாரிகளாலும் பிரச்சினைகள் வந்து அலைமோதும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
ஆண்டு பலன் - 2021
மகர ராசிக்கு ஜென்மச் சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. சனி தற்போது உங்கள் ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறார். ஜனவரி 22 ம் தேதிக்கு பிறகு இந்த வருடம் முழுவதும் திருவோணம் நட்சத்திரத்தில் இருப்பார்.
உங்களில் நாற்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். குறிப்பாக திருவோணம் நட்சத்திரத்தினருக்கு எல்லாவகையிலும் எச்சரிக்கை தேவை. அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்தச் சனி பொங்கு சனியாகி நன்மைகளைச் செய்யும்.
என்னதான் ஏழரைச் சனி என்றாலும் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் பெரிய கெடுதல்கள் எதையும் செய்ய மாட்டார். குறிப்பாக 2021-ம் வருடம் உங்களுக்கு மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது. முதலில் கசப்பை சனி தந்தாலும் பிறகு அளவற்ற இனிப்பைத் தருவார்.
மிக முக்கியமாக வருட ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் அதிசார பெயர்ச்சி மூலம் குரு நல்ல இடமான தன ஸ்தானத்திற்கு மாறுவதால் 2021-ம் ஆண்டு உங்களுக்கு சமாளிக்கக் கூடிய வருடம்தான்.
தற்போது ராசியில் இருக்கும் குரு ஏப்ரல் முதல் சில மாதங்களுக்கு இரண்டாமிடத்திற்கு மாறுவது நல்ல அமைப்பு என்பதால் இதுவரை தொழில் துறைகளில் ஏற்ற இறக்கங்களையும், பண கஷ்டங்களையும், பொருளாதார சிக்கல்களையும் சந்தித்து கொண்டிருந்தவர்கள் இனி அது நீங்கப் பெறுவீர்கள்.
குறிப்பாக இதுவரை இளையவர்களின் திருமணங்களுக்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருத்த அமைப்பு விலகுகிறது. பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் உங்களுக்கு விரயங்களைத் தந்து கொண்டிருந்த கிரக நிலைகளும் விலகுவதால் இனிமேல் நஷ்டங்கள் உங்களை விட்டு விலகும்.
அதேநேரத்தில் இந்த வருடம் புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதிய முயற்சிகள் எதையும் செய்வது கூடாது. ஜென்மச்சனி நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் கடுமையான சிக்கல்களையும், தேவைக்கு அதிகமான உடல் உழைப்பையும் தரும் என்பதால் புதிய தொழில் துவங்குவதை இளம்பருவ குறிப்பாக நாற்பது வயதுக்குட்பட்ட மகர ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.
மேலும் வருடத்தின் பிற்பகுதியில் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் ஏற்படும் என்பதால் அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் இந்த வருடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக என்னிடம் திறமை இருக்கிறது, இது போன்ற ஒரு திட்டம் இருக்கிறது, இந்த திட்டத்திற்கு நீங்கள் பணமுதலீடுகள் செய்தால் இதன் மூலம் பலமடங்கு லாபம் அடையலாம் என்று உங்களை உசுப்பேற்றுபவர்களிடம் இருந்து தள்ளி நில்லுங்கள். இந்த வருடம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிக்கல்களைத் தரும் என்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.
இந்த வருடம் உங்களுக்கு மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக்குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில், வியாபாரம் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத்தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.
உங்களில் நடுத்தர வயதினர் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில மகர ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.
அக்டோபர் மாதத்திற்கு மேல் தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.
வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.
பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.
கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப வேண்டாம். தொழில் ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.
பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள், நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட தனுசு ராசியினருக்கு இந்த வருடம் ஓரளவு நன்மைகளைத் தரும்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குலதெய்வ அருளினால் எதையும் சமாளிப்பீர்கள்.
மகர ராசி இளையவர்கள் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இந்த ஆண்டு நடக்கும். கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் சனி, விரய ஸ்தானத்தில் கேது மற்றும் சந்திரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியான செவ்வாய், 3,12-க்கு அதிபதியான குரு இணைந்து குரு-மங்கள யோகத்தை வழங்குகின்றனர். 6-ல் ராகு, ஜென்மத்தில் குரு இருப்பதால் ‘அஷ்டலட்சுமி யோகம்’ செயல்படுகிறது. பஞ்சமாதிபதி சுக்ரன் சொந்த வீட்டிலும், அஷ்டமாதிபதி சூரியன் உச்சம் பெற்றும், 6,9-க்கு அதிபதியான புதன் நீச்சம் பெற்றும் இந்த ஆண்டு தொடங்குகிறது. ஜென்மச் சனியால் விரயங்களே அதிகரிக்கும். பணம் வந்த மறு நிமிடமே செலவாகலாம். சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.
ராகு- கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று ராகு 5-ம் இடத்திற்கும், கேது 11-ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். ஐந்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். வரன்கள் முடிவாகும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிகத்திற்கு என்று ஒரு தொகையை ஒதுக்குவீர்கள். குறிப்பாக ஆலயத் திருப்பணிகள் செய்யும் யோகம் உண்டு. வீடு வாங்கும் யோகம், வாகனம் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று குரு, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது குருவுக்கு நீச்ச வீடு. இருப்பினும் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிக பயணத்தை உருவாக்கும் நேரமாக இந்த நேரம் நிகழலாம். 3, 12 ஆகிய மறைவிடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் நீச்சம் பெறுவதால் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற அமைப்பில் சிலருக்கு ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும். தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். திருமணம் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான், மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஏழரை சனியில், ஜென்ம சனி வரும்பொழுது, ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். சென்ற ஆண்டை காட்டிலும் இப்பொழுது சில பிரச்சினைகள் புதிதாக வந்து ஊடுருவும். கவலை அகல, வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துகொண்டே இருக்கும். குடும்ப பிரச்சினைகளை தக்க சமயத்தில் சமாளிப்பது நல்லது.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும் வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார் 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியிலேயே குருவோடு இணைந்திருக்கிறார். மீண்டும் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு, குரு பகவான் செல்கிறார். இது போன்ற காலங்களில் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 12-க்கு அதிபதி வக்ரம் அடையும் போது செலவுக்கேற்ற பணம் உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும்.
வழிபாடு
சனிக்கிழமை தோறும் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் அனுமனின் அலங்கார கோலத்தை வழிபட்டு வாருங்கள்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்பட வேண்டும் இனி!
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு வருகின்றார். ஏழரைச்சனியில் விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்கிவிட்டது. மகரம், சனிக்குச் சொந்த வீடு என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ‘ஆயுள்காரகன்’ என்று சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினர் களுக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகளை கொடுத்து நிவர்த்திசெய்வார். திடீர் திடீரென முடிவுகளை மாற்றிக்கொள்வீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அதி கரிக்கலாம்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருப்பதால் அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. மேலும் விரயாதிபதி குரு நீச்சம் பெறுவதும் யோகம்தான். எனவே விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். வீடு மாற்றங்கள், இடமாற்றங் கள், உத்தியோக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
ஜென்மச்சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி சஞ்சரிக்கப் போகின்றார். இந்த ஜென்மச்சனி காலத்தில், திடீர், திடீரென மாற்றங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்களை நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பர். பணியில் தொய்வு ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பகை உருவாகலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசிநாதன் மட்டுமல்லாமல் தனாதிபதியாகவும் சனி விளங்குவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அதற்குரிய காரகத்துவத்தைச் சிறப்பாகச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சகோதரம், வெற்றி, பஞ்சாயத்துக்கள், களத்திரம், குடும்பம், வெளிநாட்டு முயற்சி, தொழில் வளம், பெற்றோர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் எதிர்பாராத மாற்றம் உண்டு.
சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண முயற்சிகளில் ஒருசில தடைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக முடிந்துவிடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள், கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்கக்கூடாது. சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்து பவர்களுக்கு போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க விரும்புவர்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவைப்படும். வம்பு வழக்குகள் வாசல் தேடி வரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. அஷ்டமாதிபதியாக சூரியன் விளங்குவதால் எதையும் துணிந்து செய்ய இயலாது. தொடர்கதையாய் கடன்சுமை அதிகரிக்கும். அரசாங்க விரோதங்களும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படலாம். செய்தொழிலில் கவனம் செலுத்தா விட்டால் ஒவ்வொரு நாளும் இழப்புகளையே சந்திக்க நேரிடும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண முயற்சிகள் கை கூடும். களத்திர ஸ்தானாதிபதியாகச் சந்திர பகவான் விளங்குவதால் குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடி வரும். வாகனம் வாங்க நினைப் பவர்களுக்கு இக்காலம் உகந்த காலமாகும். வாகனத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு விலை உயர்ந்த நவநாகரிக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வநிலை உயரும். ‘சேமிப்புக் கரைகிறதே’ என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடைவர். இடம், பூமியால் லாபம் உண்டு. என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு அனுகூலமான நேரம் இது. இக்காலத்தில் கும்பத்தில் சனியும் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தன ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார பலம் பெற்றவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அர்த்தாஷ்டம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக் கலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அர்த்தாஷ்டம ராகுவாக வருவதால் ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். கேது பலத்தால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வதோடு இல்லத்து பூஜை அறையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஜென்ம ராசியில் குரு பகவான், சிந்தித்து செயல்பட்டால் வெற்றியுண்டு!
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். அதிலும் நீச்சம் அடைகின்றார். சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளாலும் விரயம், உடனிருப்பவர்களாலும் விரயம், உடல்நிலைத் தொல்லையாலும் விரயம் என்ற நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை திடீரென வந்து சேரலாம். ‘ஜென்ம ராமர் வனத்திலே’ என்பது ஒரு பழைய பாடல். ஆனால் அதை எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் சுய ஜாகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும். சில மாதங்கள் குரு பகவான் 2-ம் இடத்திற்கும் சென்று சஞ்சரிக்கின்றார். சில நாட்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். அதற்கேற்ப உங்களுக்குப் பலன்கள் அமையும். முன்னேற்றப் பாதையில் ஏதேனும் குறுக்கீடுகள் வருமேயானால், வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வழிபடுவதன் மூலம் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. மேலும் புத்திர ஸ்தானமாகவும், 5-ம் இடம் கருதப்படுவதால் தெய்வபலம் உங்களை வழிநடத்திச் செல்லும். திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மைகளும் கிடைக்கும். முன்னோர்கள் கட்டி வைத்த கோவில் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாகப் போகின்றது. அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்.
குருவின் பார்வை ஏழாமிடத்தில் பதிவதால் அந்த இடம் புனிதமடைகின்றது. வாழ்க்கைத் துணையைப் பற்றி அறிந்து கொள்ளும் இடத்தைக் குரு பார்ப்பதால் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை மாறும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாடு முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். மூத்த சகோதரத்தால் முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும். பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோர்கள் உங்கள் தொழிலுக்குத் தேவையான உதவியை செய்து கொடுக்க முன்வருவர். ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் அலைச்சலைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வது நல்லது. ஒவ்வாத உணவுகளை உட்கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும் வாய்ப்பு உண்டு.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்குபவர் சூரியன். எனவே அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்கள் வந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் வந்தாலும், திடீர் விரயங்களால் சேமிக்க இயலாது. அடிக்கடி ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கையை உயரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தடைகள் வரலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். சப்தமாதிபதியான சந்திரன் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத் தட்டுப்பாடுகள் அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பிள்ளைகளின் கல்யாணம் கைகூடும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. மனதுகாரகன் சந்திரன் என்பதால் எதையும் நீங்கள் நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். சலுகைகளும், சம்பள உயர்வும் தர முன்வருவர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாயின் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். ‘இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்கவேண்டும்’ என்று நினைத்தவர்களுக்கு, அந்த வாய்ப்புக் கைகூடும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நேரமிது. போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ‘வெளிநாட்டில் பணிபுரிய வேண்டும்’ என்று காத்திருப்பவர்களுக்கு இப்பொழுது அழைப்புகளும் வரலாம். சுயஜாதகம் பலம்பெற்றிருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ‘உறவினர்களிடம் கொடுத்த கடன் வசூலாகவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது தானாகவே வசூலாகும். மூத்த சகோதரர்கள் மட்டுமல்லாமல் முன்னேற்றப் பாதைக்கு மற்ற சகோதரர்களும் வழிகாட்டுவர்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. அப்பொழுது அந்த மூன்று ஸ்தானங்களும் புனிதமடைகின்றது. சகாய ஸ்தானாதிபதியான குரு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனக்கலக்கம் அகலும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். ஆதாயம் தரும் தகவல்கள் உங்களைத் தேடிவரும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் மூலதனம் போட முன்வருவர்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக ஒரு தொகையைச் செலவிட நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றங்கள் எதிர்பாராமல் வரலாம். ‘பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். சேமிப்பு கரையாமல் இருக்க எந்த நேரமும் விழிப்புணர்ச்சி தேவைப்படும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசனை செய்து செய்யுங்கள். மேலும் இறைவழிபாடு உங்களை நல்ல பாதையில் வழிநடத்தும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
மகர ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாமிடத்திற்கு ராகு செல்கிறார். தற்போது பனிரெண்டாமிடத்தில் இருக்கும் கேது மிக நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுகிறார்.
ராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பாவம் என்பதால் லாப ஸ்தானத்திற்கு மாறப் போகும் கேதுபகவானால் மகரத்திற்கு நன்மைகள் இருக்கும்.
ஒரு முக்கிய பலனாக நமது மூலநூல்களில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக் குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும், விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும் எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது.
ஆயினும் ராகுபகவான் இப்போது மாறப் போகும் ரிஷப வீடு அவருக்கு மிகவும் பிடித்தமான வீடு என்பதால் ரிஷபத்தில் இருக்கும் ராகு கெடுதல்களைச் செய்ய மாட்டார் என்ற அடிப்படையில் மகர ராசிக்கு ராகுவால் எந்தக் கெடுதல்களும் வர வாய்ப்பிலை.
எனவே ராகு-கேதுக்களின் இரண்டு நிலைகளிலும் இம்முறை மகர ராசி நன்மைகளையே அதிகமாகப் பெறும் என்பதால் இந்தப் பெயர்ச்சியை நீங்கள் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம்.
பதினொன்றில் இருக்கும் கேதுபகவான் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார். குறிப்பிட்ட சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பையும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பையும் தருவார்.
இன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாட்டையும், வேறு சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேதுபகவான் தருவார் என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி மகர ராசிக்கு மிகவும் ஒரு நல்ல பெயர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி.
அடுத்து மிக முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். எப்போதுமே கோட்சார பலன்களை நுணுக்கமான பார்வையோடு எழுதுபவன் என்பதால் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில சாதகமற்ற நிலைகளையும் மகரராசிக்காரர்களுக்கு தரும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால் மகர ராசிக்கு தற்போது ஜென்மச்சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பால் 30, 40 வயதுகளில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் சிக்கலுக்கு உள்ளாக வேண்டிய அமைப்புகளை சனி இந்த நேரத்தில் செய்வார் என்பதால் மகரத்தினர் இப்போதே அனைத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஏனெனில் கோட்சார நிலையில் ராகுவை விட சனியே பலவான் எனும் நிலையில் உங்களுக்கு சனியின் பலனே தூக்கலாக இருக்கும்.
குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் கிரக தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பரிகாரங்கள்
ஏழரைச்சனியின் நடுப்பகுதியான ஜென்மச்சனி அமைப்பில் நீங்கள் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன்கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். ராமதாசன் ஸ்ரீஹனுமனுக்கு சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுவதும் சனியின் கடுமையை அண்டவிடாது பாதுகாக்கும். ஏழரைச்சனி முடியும் வரை தனித்த சனியின் சந்நிதி முன் நின்று வணங்க வேண்டாம்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)