
இன்றைய ராசி பலன்கள்
முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாள். வியாபார விரோதங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உறவினர் பகை ஏற்படும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.
வார பலன்கள்
15.1.21 முதல் 21.1.21 வரை
குரு, புதன், சந்திரன் அதிர்ஷ்ட பலன்களை தருவர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
புனர்பூசம் 4: உங்களின் செயல்கள் பிறரை திருப்தியடைய செய்யும். சுபநிகழ்வு பற்றிய முயற்சியில் வெற்றி ஏற்படும்.
முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.
பூசம்: நண்பர்களை திருப்தி செய்யும் முயற்சியில் சிறு தோல்வி ஏற்படும். பல காலமாக மனதை அரித்த கவலை தீரும். நெருங்கிய உறவினர் மூலமாக பிரச்னை ஒன்று சரியாகும். பணத்தின் அருமையை உணர்வீர்கள்.
ஆயில்யம்: தோல்வியால் துவளாமலும், வெற்றியால் குதிக்காமலும் நடுநிலையாக இருங்கள். சிறு தவறுகளால் பழி நேராதபடி பார்த்து கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.
தமிழ் மாத ஜோதிடம்
ஆண்டு பலன் - 2021
கடக ராசிக்கு வருட முற்பாதியில் சில மாற்றங்களைத் தந்து பிற்பகுதியில் நன்மைகளைச் செய்யும் வருடமாக 2021-ம் ஆண்டு அமையும்.
வருட ஆரம்பத்தில் குருபகவான் ஏழாமிடத்தில் இருப்பது ஒரு நல்ல அமைப்பு என்பதால் பிறக்கப்போகும் புதுவருடம் உங்களுக்கு நல்ல வருடமாகத்தான் இருக்கும். எனவே இந்த ஆண்டு சாதகமற்ற அமைப்புகள் எதுவும் கடகத்திற்கு இல்லை.
குறிப்பாகச் சொல்லப் போனால் வருடம் முழுவதும் ராகு லாபஸ்தானத்தில் சுபத்துவமாக இருப்பது தொழில் விஷயத்திற்கும், பணவரவிற்கும் நல்ல அமைப்பு. எனவே கடகத்திற்கு இந்த வருடம் நன்மைகளும், மேன்மைகளும் மட்டுமே இருக்கும் என்பது உறுதி.
அதேநேரத்தில் ஒரு குறிப்பிட்ட பலனாக கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருந்தாலும் அவர் குருவுடன் இருப்பதால் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி, சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.
ஏழாமிடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கும் சனி உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.
வருட ஆரம்பத்தில் விரைய ஸ்தானமான பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் பிறக்க இருக்கின்ற புத்தாண்டு சுப, விரயங்களையும் தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும். குறிப்பாக இந்த புத்தாண்டில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச் செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.
இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த கடகத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.
வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்த கடக ராசியினர் அவை நீங்கப் பெறுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை விலகப் பெற்று தன்னம்பிக்கை கூடுதலாகும்.
புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் நீச்ச வீட்டில் இருப்பது போல தோன்றினாலும் ஏப்ரல் முதல் அவர் அதிசார அமைப்பில் இருப்பதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். அதேநேரத்தில் இதன் பலனாக உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு இப்போது கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.
இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் இந்த வருடம் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.
திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.
தொழில் செய்பவர்கள் இப்போது அகலக்கால் வைக்க வேண்டாம். தொழிலை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய வருடம் இது. தொழில் விஷயங்களில் யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். இனிமேல் கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.
பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது. எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது.
பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.
சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் வேலையில் பாராட்டப் படுவீர்கள். மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.
வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.
அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். புத்திசாலியாக இருந்தும் வாய்ப்புகள் இதுவரை கிடைக்காதவர்களுக்கு நல்ல வருடம் இது.
நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த வருடம் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், மற்ற அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்னேற்றமானதாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் எதிர்வரும் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத்தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் சந்திரன், சனி மற்றும் கேதுவுடன் இணைந்து 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் குருவும் செவ்வாயும் இணைந்து குரு-மங்கள யோகத்தை உருவாக்குகிறார்கள். புதன் நீச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி சூரியன் உச்சம் பெற்றும், லாபாதிபதி சுக்ரன் சொந்த வீட்டிலும் சஞ்சரித்து ஆண்டு தொடங்குவதால் பணப்பற்றாக்குறை அகலும்.
ராகு-கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு ராகுவும், 5-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பால் கடன் உதவி பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானம் கிடைக்கும். பூர்வீக வீடுகளில் பாகப்பிரிவினை செய்துகொள்ள எடுத்தப் பஞ்சாயத்துகள் நல்லமுடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியை தொடர முன்வருவீர்கள்.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். அது குருவுக்கு நீச்ச வீடு. இருப்பினும் பார்க்கும் இடங்களால் உங்களுக்கு நல்ல பலன் வந்து சேரும். தனவரவு திருப்தி தரும் பெண்களால் நன்மை உண்டு. உதிரி வருமானங்கள் கிடைக்கும். எடுத்த காரியம் எளிதில் முடியும். மாமன், மைத்துனர் வகையில் மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சி கைகூடும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்க ரீதியாக சனி பகவான் மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார். ராசிக்கு 7-ம் இடத்தை கண்டகச் சனி என்பார்கள். இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விருப்பமின்றி நடைபெறும். குடும்ப சுமை கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வக்ரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021 முதல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இவற்றின் விளைவாக உங்களுக்கு திடீர் மாற்றங்கள் செல்கிறார். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு வாங்கல், கொடுக்கல்களில் ஏமாற்றங்களைக்கூட சந்திக்க நேரிடும். வீடு மாற்றம் நாடு மாற்றம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு குறையலாம்.
வழிபாடு
பஞ்சமி திதியில் விரதமிருந்து வராகி அம்மனை வழிபட்டு வருவதோடு யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியிலுள்ள நித்ய கல்யாணி, கயிலாசநாதரை வழிபட்டு வந்தால் நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
கண்டகச் சனியின் ஆதிக்கம், கடமையில் கவனம் இனி தேவை!
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். இதைக் ‘கண்டகச் சனி’ என்று சொல்வது வழக்கம். இப்போது சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது.
‘கண்டகச் சனி’ என்றதும், ‘ஏதேனும் ‘கண்டம்’ வந்து விடுமோ’ என்று நினைக்க வேண்டாம். சனி மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப சனியின் கடுமையைக் குறைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது.
ஏழாமிடத்தில் சனி
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக, உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பூர்வீகம், பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வியில் கரையேற கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினம் என்றாலும், குரு பார்வை இருப்பதால் மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். தனாதிபதியாகவும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சூரியன் விளங்குவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்பு கிட்டும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதனாக சந்திரன் இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மின்னணுத் துறையிலும், கலைத்துறையிலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவரும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும், கும்ப ராசி சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். சொந்தங்களின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு வருவதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகச்சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் தொடங்க வாய்ப்புகள் கைகூடி வரும். 4-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகனங்கள் வாங்கிப் பயணம் செய்யும் முயற்சி கைகூடும். கேதுவின் ஆதிக்கத்தால் சகோதர வர்க்கத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அவர்கள் மூலம் வாங்கிய தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
புதன்கிழமை தோறும் விரதமிருந்து ராமபிரான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராமர் பட்டாபிஷேக படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து ராமர், சீதா, அனுமன் ஆகியோருக்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. ராமபிரான் வழிபாடு நம்பிக்கையை நிறைவேற்றி வைக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஏழாமிடத்தில் குரு பகவான், இல்லற வாழ்க்கை இனி அமையும்!
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு ஓராண்டு காலம் வீற்றிருந்து பார்வை பலனால், உங்கள் விருப்பங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பார். இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு, நீச்சம் பெற்றாலும் கூட நேரடியாக அவர் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். எதை எப்படிச் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அப்படியே செய்து முடிப்பீர்கள். இடையில் சில மாதத்திற்கு எட்டாமிடத்திற்கும் குரு செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, நினைத்ததெல்லாம் நிறைவேறும். அஷ்டம குருவின் ஆதிக்க காலத்தில் தடைகளும், தாமதங்களும் வருமேயானால் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளைப் பெறமுடியும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கின்றார். பிறகு 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப்போகின்றார். உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உறவினர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கும். வீடு தேடி வந்த வீண் பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரமிது. திடீரென அறிமுகமாகும் ஒருவரால் உங்களுக்கு நற்பலன்கள் வந்து சேரப்போகின்றது.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல வாய்ப்புகள் கைகூடிவரும். குரு பார்வையால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. உத்தியோகம் தொடர்பான நேர்முகத் தேர்வில் இப்பொழுது வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு அரசியல் களத்தில் குதிப்பீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் திடீரென வரலாம்.
ஒருசிலருக்கு உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் கடன்சுமை குறைய உதவிபுரிவர். குருவின் பார்வை 11-ம் இடம் எனப்படும் லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து கூட அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்துவருவர். பணியாளர்களின் தொல்லை அகலும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழில் இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாறும் அமைப்பு கைகூடும். தெளிந்த மனதுடன் செயல்படுவீர்கள். கவுரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மூத்த சகோதரத்துடன் இருந்த மோதல்கள் விலகும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே தனாதிபதி சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தனவரவு திருப்திகரமாக இருக்கும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். இதுவரை சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை இனிக் குறையும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ சுப காரியம் நடைபெறுவதில் தடை இருந்தால், அந்தத் தடைகள் இனி தானாக விலகும். பிரபலங்களின் நட்பால் பெருமை காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன் உங்கள் ராசிநாதன் ஆவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘குருசந்திர யோக’ அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குறிப்பாக தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். பெற்றோர்களும், உற்றார், உறவினர்களும் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரம் வெற்றிநடை போடும். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை தடையாக இருந்த பயணம் தானாக நடைபெறும். ‘நூதன வாகனங்கள் வாங்கிப் பயணிக்க வேண்டும்’ என்று விரும்புபவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. விவசாயம், பண்ணை வீடுகள் அமைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்வோர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் ஈட்டுவர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் சஞ்சாரம் மிகச்சிறப்பாக இருக்கின்றது. செவ்வாய் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாகும். பாக்கிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் உலாவரும் பொழுது, நீங்கள் நினைக்க இயலாத யோகம் வந்துசேரப்போகின்றது. வியாபாரம் சூடுபிடிக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் தானாகவே வந்து சேரலாம். ஒருசிலருக்கு தலைமைப் பொறுப்புகளும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர். நீங்கள் கேட்ட சலுகைகளையும் உடனுக்குடன் வழங்குவர். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், எதிர்கால நலன்கருதியும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கைவிட்டுப்போன சொத்துக்களை மீண்டும் கைப்பற்றுவீர்கள். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழிலில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் குரு, கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. ஆயினும் அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைத்திருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு. எதிர்ப்புகளும் வீடு தேடி வரும். இல்லத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் குரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு செல்லும் முயற்சியை தள்ளி வைப்பது நல்லது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். குடும்பச்சுமை அதிகரிக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க ஏதேனும் சொத்துக்களை விற்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் வரலாம். வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலேயே அமையும். மறைமுகப் பகை அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படும் சூழ்நிலை கூட உண்டு. எனவே கூட்டாளிகளை அனுசரித்துக் கொள்வதோடு மேலிடத்தில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
கடக ராசிக்காரர்களுக்கு தற்போது நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மிகப் பெரிய மாற்றங்களையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தரும்.
ராகு-கேதுக்கள் தங்களுடைய ஒட்டு மொத்த சுற்றுப் பாதையான 18 வருடங்களில் நான்கரை வருடங்கள் மட்டுமே நன்மைகளை தரும் வருடமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி ஒரு மனிதனின் ராசிக்கு 3, 6, 11-ம் இடங்களில் சர்ப்பக் கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் அமரும் போது அவனுக்கு நல்ல பலன்கள் நடக்கும் என்பது ஜோதிட விதி.
இந்த மூன்று இடங்களிலும் லாபஸ்தானம் என்று சொல்லப்படும் 11-ம் இடம் ஒரு மிக விசேஷமான அமைப்பை கொண்டதாகும். பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேதுக்கள் 11-ல் அமரும் போது மிகச்சிறந்த நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்கள். அதிலும் ராகு-கேதுக்கள் 11-ம் இடத்தில் வருவது ஒருவருக்கு 18 வருடங்களுக்கு ஒருமுறையே நடக்கும்.
இம்முறை ரிஷப வீட்டிற்கு மாற இருக்கும் 11-மிட ராகுவால் அனைத்து தரப்பு கடக ராசிக்காரர்களுக்கும் அவரவர்கள் வயது, இருப்பிடம், தகுதி நிலை போன்றவைகளுக்கு ஏற்ப ராகு-கேதுக்களால் நன்மைகள் இருக்கும்.
குறிப்பாக பிறந்த ஜாதகத்தின்படி ராகு நல்ல இடங்களில் அமர்ந்த ராகு தசையோ, புக்தியோ நடைபெறுபவர்களுக்கு கூடுதலான நற்பலன்கள் உண்டு. அதேபோல ஜாதகத்தில் ராகுதசை இல்லாவிட்டாலும் யோக தசாபுக்திகள் நடைபெறுவர்களுக்கும் மேன்மையான பலன்கள் இருக்கும்.
பொதுவாக ராகு கோட்சாரத்தில் நல்ல இடங்களில் வரும் போது சாதூரியமான விதங்களில் பண வரவை தருவார் என்பதாலும், மறைமுகமான வழிகளில் தன லாபம் தருவர் என்பதாலும், இம்முறை உங்களுக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு பண வரவுகளை அளிப்பார்.
அதுபோன்ற அமைப்பில் தற்போது ராகு, பதினோன்றாமிடத்திற்கு வர இருப்பதால் இதுவரை தொழில் விஷயத்திலும், பண விஷயத்திலும் முன்னேற்றங்களை அடையாதவர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடந்து அருமையான பண வரவுகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு அமையும்.
ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியும் கடகத்திற்கு நன்மை தரும் இடமான ஏழில் அமைவதால் இம்முறை உங்களுக்கு சந்தோஷம் தரும் விஷயங்கள் இருக்கும் என்பது உறுதி.
குரு இன்னும் சில வாரங்களில் நல்லபலனைத் தரும் ஏழாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களின் பொருளாதார மேம்பாடு இனிமேல் திருப்திகரமாக இருக்கும். யாரிடமும் கேட்கும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். மாறாக பிறருக்கு கொடுக்கும் நிலையில் இருப்பீர்கள்.
ராகு-கேதுக்கள் 5, 11-ம் இடங்களில் மாறுவதால் வேறு மத, மொழி, இனம் போன்ற நமக்கு சம்பந்தம் இல்லாத அன்னிய அமைப்புகளினாலும், நண்பர்களினாலும் கடகத்திற்கு இம்முறை லாபங்கள் இருக்கும்.
குறிப்பாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களை இந்த பெயர்ச்சியின் மூலம் சர்ப்பக் கிரகங்கள் தரும். வெகுநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் திடீரென முடிவடைந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தனலாபத்தையும், பணவரவுகளையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.
இளைய பருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். ராகு யோகத்தை தரப்போவதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிப்பார். இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். திருமணம் நிச்சயம் ஆகும்.
மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்லபலனைத் தரும் பெயர்ச்சிதான் பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நல்ல பெயர்ச்சி இது.
கொரோனா போன்ற காரணங்களினால் இதுவரை சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறும். வியாபாரிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்தப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும்.
பரிகாரங்கள்
தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள ராகுபகவானின் திருத்தலமான திருநாகேஸ்வரத்திற்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபட்டுத் திரும்புவது ராகுபகவானால் ஏற்படும் நன்மைகளைக் கூடுதலாக்கும்.. வடமாவட்டங்களில் இருப்பவர்கள் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயத்தில் ஒரு அபிஷேகம் செய்யுங்கள்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)