search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதலாவது தகுதி சுற்றில் நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதலாவது தகுதி சுற்றில் நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்

    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
    • தோல்வி அடையும் அணி வெளியேறாது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசை சந்திக்கிறது. நெல்லை அணி தனது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று கடைசி லீக் ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் கோவையிடம் தோற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் 2 ஆட்டங்களில் (நெல்லை, மதுரை அணிகளிடம்)தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தனதாக்கி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. நெல்லைக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சூப்பர் ஓவரில் தோல்வி கண்டது.

    அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல் அணியாக இறுதிபோட்டிக்கு நுழைய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வியூகம் வகுக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை தொடர நெல்லை அணி வரிந்து கட்டும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி வெளியேறாது. மேலும் ஒரு வாய்ப்பாக 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்சுடன் மோதும்.

    Next Story
    ×