search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் சங்கம் விருப்பம்
    X

    (கோப்பு படம்)

    இந்தியா-பாகிஸ்தான் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த மெல்போர்ன் கிரிக்கெட் சங்கம் விருப்பம்

    • போட்டியை நடத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாக தகவல்.
    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், ஐ.சி.சி.யிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல்

    மெல்போர்ன்:

    எல்லை தாண்டி ஏவப்படும் பயங்கரவாத பிரச்சினையால் பாகிஸ்தான் அணி உடன் இந்திய அணி பங்கேற்கும் நேரடி சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக இரு நாட்டு அணிகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் சங்கம் (எம்சிசி ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி தொடரை நடத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அதன் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் பாக்ஸ் கூறியதாவது ;

    உலகெங்கிலும் உள்ள சில மைதானங்கள் ரசிகர்கள் இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது, ரசிகர்கள் நிரம்பி விளையாட்டைக் கொண்டாடுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அண்மையில் மெல்போர்னில் இந்தியா பாகிஸ்தான் (டி20) போட்டி நடைபெற்ற போது கண்ட சூழலை நான் இதுவரை வேறு எங்கும் உணர்ந்ததில்லை.

    ஒவ்வொரு பந்துக்கும் ரசிகர்கள் எழுப்பும் உற்சாகம் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது, குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் அனைவரும் போட்டியை மிகவும் ரசித்தனர். இதனால் எம்சிசியில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றால் அழகாக இருக்கும். ரசிகர்களும், ஒவ்வொரு போட்டிக்கும் வந்து கிரிக்கெட் அரங்கை நிரப்புவார்கள்.

    அதனால் நாங்கள் அந்த போட்டிகளை நடத்த விரும்புகிறோம். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ஐசிசியிடம் பேசும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். இதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது மிகவும் சிக்கலானது, பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×