search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சவாலை சந்திக்க பெரியார் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் - சத்யராஜ் ஆவேசம்
    X

    சவாலை சந்திக்க பெரியார் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் - சத்யராஜ் ஆவேசம்

    பெரியார் சிலை ஒருநாள் அகற்றப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு, சவாலை சந்திக்க பெரியார் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சத்யராஜ் ஆவேசாக கூறியிருக்கிறார். #PeriyarStatue #HRaja
    திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முந்தைய லெனின் சிலை அதிரடியாக அகற்றப்பட்டது. இதுபற்றி தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவு செய்திருந்தார். 

    அதில், லெனின் சிலை போல், நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை என பதிவிட்டிருந்தார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் வலுத்தது. வன்முறைக்கும், மோதலுக்கும் வழிவகுக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். கடும் எதிர்ப்பால் எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவை நீக்கினார்.

    இந்நிலையில், இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 

    திரிபுராவில், தோழர், புரட்சியாளர் லெனின் சிலை உடைப்புக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டிலும் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜாவை தமிழக அரசு சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரியார் என்பது ஒரு சிலையல்ல, ஒரு பெயர் அல்ல, ஒரு உருவமல்ல, ரத்தமும், சதையும், எழும்பும் சார்ந்த ஒரு மனிதப் பிறவி மட்டும் அல்ல, பெரியார் என்பது ஒரு தத்துவம். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, பெண்களின் விடுதலைக்காக, மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம். 



    அவர் சிலையாக மட்டும் வாழவில்லை. எங்களைப் போன்றவர்களின் உள்ளத்திலும் வாழ்ந்து வருகிறார். எந்த பதவியை வைத்தும், சக்தியை வைத்தும், எந்த இராணுவத்தை வைத்தும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நேரம் குறித்து தேதி குறித்தால், பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எச்.ராஜா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார். 

    இந்நிலையில், பெரியார் சிலை அகற்றம் குறித்த கருத்துக்கு எச்.ராஜா அவரது பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவை தான் பதிவிடவில்லை என்றும் ராஜா குறிப்பிட்டுள்ளார். #Sathyaraj #PeriyarStatue #HRaja

    Next Story
    ×