என் மலர்
முன்னோட்டம்
புவன் நல்லான் இயக்கத்தில் ஈஷான், ஸ்வேதா ஷர்மா, வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னி’ படத்தின் முன்னோட்டம்.
'மோ', 'ஜாம்பி' படங்களை இயக்கிய புவன் நல்லான் இயக்கும் மூன்றாவது படம் 'கென்னி'. 'மியாவ்' படத்தில் நாயகனாக நடித்த ஈஷான் இதில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்வேதா ஷர்மா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக இருந்த வில்வா 'கென்னி' படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாவது: “நான் சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதில் 'கென்னி'யும் ஒரு படம்.நான் இதில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் ஆக நடித்து இருக்கிறேன்.

இந்தப் படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர். இயக்குநர் என்னிடம் சொன்ன கதையும் என் கேரக்டரும் எனக்குப் பிடித்திருந்தது. அவர் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைத்திருக்கிறார். நம் எல்லோருக்கும் திரில்லர் படங்கள் பிடிக்கும். இந்த படத்தின் கதையைச் சொல்ல முடியாது ஏனென்றால் படத்தின் ஒரு காட்சியில் அடுத்த காட்சிக்கான ட்விஸ்ட் இருக்கும்.
ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பாக இருக்கும். இயக்குநர் ஏற்கெனவே இயக்கிய படங்களில் த்ரில்லரில் கூட நகைச்சுவை கலந்து இயக்கி இருப்பார். ஆனால் 'கென்னி' படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது." என்று வனிதா விஜயகுமார் பாராட்டிக் கூறியிருக்கிறார்.
நாநி பாலா இயக்கத்தில் பிரித்வி, பூர்னிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் முன்னோட்டம்.
"அது வேற, இது வேற' என்ற படத்தைத் தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் அடுத்ததாக தயாரித்துள்ள திரைப்படம் ‘ஒபாமா உங்களுக்காக’. நாநி பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரித்வி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூர்னிஷா நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.லெனின் மேற்கொண்டுள்ளார்.

பிரித்வி, ஜனகராஜ்
படம் குறித்து இயக்குனர் நாநி பாலா கூறியதாவது:- “ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். ‘ஒ’ என்பது கதாநாயகனின் ‘இனிஷியல்.’ ‘பாமா’ என்பது கதாநாயகியின் பெயர். இதுதான், ‘ஒபாமா.’ இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக சொல்லும் படம், இது. நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவையில் ஜனகராஜ் கலக்கி இருக்கிறார்”. இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல நடிகர் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார். “மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஷிரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டிக்கிலோனா படத்தின் முன்னோட்டம்.
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் ‘டிக்கிலோனா’. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தானம், யோகிபாபு
சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற செப் 10-ந் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் “விக்ராந்த் ரோணா” படத்தின் முன்னோட்டம்.
பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம், 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார்.
பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற சிவக்குமார் படத்தின் கலை இயக்கம் செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அஷோக் மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிச்சா சுதீப், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்
படத்தை பற்றி இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது:
“விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரிய பாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் சுதீப் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்றார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி இயக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா நடிப்பில் உருவாக உள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

கூகுள் குட்டப்பா படக்குழு
மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
ரமணா கோபிசெட்டி தயாரிப்பில் இஷான், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தத்வமசி திரைப்படத்தின் முன்னோட்டம்.
இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. “மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
தத்வமசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும். விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள தத்வமசி, அதன் புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராதாகிருஷ்ணா தெலு தனது RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார், ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய. மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படத்தில் பணிபுரிகிறார், சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றுகிறார்.
நர்ரா சிவநாகு இயக்கத்தில் தாரக், நவீனா, அர்ஜூன் தேஜா, சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘மதுரை சிங்கம்’ படத்தின் முன்னோட்டம்.
தேவி நேனி எனும் பெயரில் ஆந்திராவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது. என்.டி.ஆரின் பேரன் தாரக் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க, நவீனா கதாநாயகியாக நடித்திருக்கின்றார். அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூர்ணா, தனிஷ்கா, கோட்டி ஆகியோர் நடித்துள்ளனர். கோட்டி இசையமைத்துள்ள இப்படத்துக்கு டி.ஜி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மதுரை சிங்கம் படக்குழு
சிரஞ்சீவி, கிருஷ்ணா, நாகேந்திர பிரசாத், சுமன் ஆகியோர் கதாநாயகனாக நடித்த படங்களை இயக்கியவரும், பாலிவுட் பிரபலமான சோனு சூட்டை தெலுங்கில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவருமான நர்ரா சிவநாகு இப்படத்தை இயக்கியுள்ளார். எவரெஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக ஆப்பிள் மூவி மீடியாஸ் தமிழில் உருவாக்கியுள்ளது. டி.ஆர்.திவ்யா - சுந்தர வடிவேலு தயாரித்துள்ளார்.
சஞ்சய் ராம் இயக்கத்தில் லெனின், ககன தீபிகா, திவ்யாங்கனா நடிப்பில் உருவாகி இருக்கும் கிரீன் சில்லீஸ் படத்தின் முன்னோட்டம்.
ஜி.எஸ்.சினிமா இண்டர் நேஷனல், ரெட் குளோபல் நெட்ஒர்க் இணைந்து தயாரிக்கும் "கிரீன் சில்லீஸ்" படத்தை சஞ்சய் ராம் இயக்குகிறார். கதையின் நாயகன் லெனின் ஆட்டோ ஓட்டும் நந்தாவாக அறிமுகமாகிறார். நாயகன் லெனினின் முறைப்பெண்ணாக ககன தீபிகாவும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விலைமாது மகியாக டெல்லியைச் சேர்ந்த திவ்யாங்கனா நடித்திருக்கிறார்.
பல படங்களை இயக்கி தயாரித்த சஞ்சய் ராம் மன்மதன் எனும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுமுகங்களாகிய பரூக், தினேஷ் நந்தித், பேபி தேவநந்தா, பேபி அனுக்ரகா, பேபி கார்த்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிரீன் சில்லீஸ் படக்குழு
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோக்காரனுக்கும் அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவிற்கும் இடையே மலரும் அன்பின் வெளிப்பாடே "கிரீன் சில்லீஸ்". பினேஷ் தம்பி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜி.ராம் இசையமைத்துள்ளார்.
கே.ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் தயாராகி உள்ள படம் தேவதாஸ் பிரதர்ஸ். துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். சஞ்சிதா ஷெட்டியுடன், அறிமுகங்கள் ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா என 4 பேர் நாயகிகள். இவர்களுடன் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை கே.ஜானகி ராமன் இயக்கி உள்ளார். தரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தேவதாஸ் பிரதர்ஸ் படக்குழு
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார். அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பது கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது திரைக்கதையின் போக்காக இருக்கும்” என கூறியுள்ளார்.
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ், பாவ்யா ட்ரிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கதிர்’ படத்தின் முன்னோட்டம்.
துவாரகா ஸ்டுடியோஸ் சார்பாக அறிமுக இயக்குனர் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவான படம் ‘கதிர்’. வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல மலையாள இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் கையாண்டுள்ளார்.

கதிர் படக்குழு
கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்க்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை. “நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
ஜேகே இயக்கத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சிங்கப்பார்வை’ படத்தின் முன்னோட்டம்.
நாராயணன் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜேகே இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சிங்கப்பார்வை’. இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ருர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். மேத்யூஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு வெங்கி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். பழனிவேல் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி, இப்படத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கமல் பார்வையற்றவராக நடித்த ராஜபார்வை படத்தின் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என அத்தலைப்பையே முதலில் வைத்திருந்தனர். பின்னர் இப்படத்தின் தலைப்பை சிங்கப்பார்வை என படக்குழு மாற்றியது. இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ரிலீசாக உள்ளது.






