search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
    X

    அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் உருவாவதுபோல், பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகி வருகிறது. #PasumponThevar
    இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகி வருகின்றன. அரசியல் தலைவர், விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக உருவாகின்றன.

    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் உருவாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது.

    இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி என 3 இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். ஆந்திராவில் என்.டி.ஆரின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையும் இந்த வரிசையில் படைத்தலைவன் என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. ஆன்மீக வாதியாகவும் சாதிபாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

    நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் ஆங்கிலேய அரசை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். இவரது வாழ்க்கை வரலாற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் எழுதி இயக்குகிறார் தங்கத் தமிழ்வாணன். கதாநாயகனாக ஆர்.ரமேஷ் நடிக்கிறார். ஆடுகளம் நரேன், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    தங்கத் தமிழ்வாணன் படம் பற்றி கூறும்போது, ‘மறைக்கப்பட்ட உண்மைகளையும் புதைக்கப்பட்ட வரலாறையும் மீட்டெடுக்கும் விதமாக படைத்தலைவன் படம் உருவாகிறது. பசும்பொன் மண்ணில் தேவரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை தொகுத்து இருக்கிறோம்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாச்சூர், கேரள அலப்பி, தஞ்சை பெரிய கோவில், காளையார் கோவில், கீழத்தூர் மற்றும் பசும்பொன் கிராமத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் தொடக்க விழா பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் நடந்த போது அந்த ஊர் மக்கள் கிடாய்களை வெட்டி படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தனர்’ என்றார்.
    Next Story
    ×