search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
    X

    படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? என்று மித்ரன் கேள்வி எழுப்பியுள்ளார். #Irumbuthirai #Vishal
    விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படம் ‘இரும்புத்திரை’. இந்த படம் வெளியாவதை தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். நடராஜன் என்பவர் தொடர்ந்திருக்கும் பொது நல வழக்கு மனுவில் ‘‘இரும்புத்திரை படத்தின் டீசரில் ஆதார் அடையாள அட்டையை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கும், கொள்கைக்கும் எதிரான காட்சிகள் அமைந்துள்ளன. மத்திய அரசின் நலத்திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க மத்திய அரசுக்கும், சென்சார் வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம்  படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே திரையிடப்படுகிறது. எனவே படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே படம் குறித்த தேதியில் ரிலீசாக இருக்கிறது.  



    இந்த சர்ச்சை பற்றி ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் மாலைமலர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு சுமார் 3 மணி நேரம் என்னிடம் விளக்கம் கேட்டபிறகே சென்சார் சான்றிதழ் தந்தார்கள். அப்போதே படம் தொடர்பான அனைத்து விளக்கங்களும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்து விட்டேன். மனுதாரர் எப்போது, எப்படி என் படத்தை முழுதாக பார்த்தார்? டீசரில் இடம்பெற்றிருக்கும் ஆதார் அட்டை என்ற ஒரு வார்த்தை வசனத்தை வைத்து தப்பாக காட்டியுள்ளனர் என்று நீதிமன்றத்துக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. படத்தை பார்க்காமல், எந்த அடிப்படையுமே இல்லாத குற்றசாட்டு இது’’ என்றார்.

    இந்த படத்தை வெளியிடாமல் தடுக்க சதி நடப்பதாக வினியோகஸ்தர் ஸ்ரீதரன், பி.டி.செல்வகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். #Irumbuthirai #Vishal

    Next Story
    ×