search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்: முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
    X

    பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்: முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

    திரை உலகினர் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். #TamilCinemaStrike #TFPC
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்.

    டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடும் சேவை நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த மாட்டோம். தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கணினிமயம் ஆக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக தியேட்டர் அதிபர்களுடன் தயாரிப்பபாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த பிரச்சினை காரணமாக தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பிற மொழி படங்களும், பழைய படங்களும் திரையிடப்படுகின்றன. எனவே தியேட்டர்களில் கூட்டம் இல்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக கோட்டைக்கு ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக விஷால் அறிவித்தார்.



    காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடப்பதால் கோட்டைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜுவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.

    ‘பெப்சி’ தலைவர் செல்வ மணி, தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உதவ வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.

    அப்போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். திரைப் பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று உறுதி அளித்தார்.

    பின்னர் இந்த சந்திப்பு குறித்து விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரை உலகினர் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ராஜு உறுதி அளித்துள்ளார். இதன்மூலம் எங்கள் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilCinemaStrike #TFPC
    Next Story
    ×