என் மலர்
சினிமா

அரசியலில் ரஜினி சந்திக்கவிருக்கும் மூன்று சவால்கள் - வைரமுத்து விளக்கம்
அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மூன்று சவால்கள் காத்திருப்பதாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்தது தொடர்பாக கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறித்து அவரின் நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன்.
இந்த அறிவிப்புக்கு பின்னர் அவருக்கு வாழ்த்துக்களும், வசை மொழிகளும் குவிந்து வருவதை ஊடகங்களில் கண்டேன். வாழ்த்துவதற்கும், வசைப்பாடுவதற்கும் போதுமான கால அவகாசத்தை ரஜினிக்கு கொடுக்கவில்லை என்பது எனது எண்ணம். வாழ்த்துகிறவர்கள் எல்லாம் நாளை வசைப்படலாம். வசைப்பாடுகிறவர்கள் நாளை வாழ்த்தலாம். இந்த கருத்துக்கள் இடமாற்றத்துக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.
அரசியல் அறிவிப்பு வெளியான பின்னர் தொலைபேசியில் ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னேன். அப்போது கலைதுறையில் செலுத்திய உழைப்பை போல இரு மடங்கு உழைப்பை அரசியலில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தேன்.

ரஜினி மிகப்பெரிய கலைஞன். தற்போது அவர் தலைவனாக தனது வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். கலைஞன் - தலைவன் என இந்த இரண்டுக்குமான இடைவெளி மற்ற மாநிலங்களில் மிக மிக அதிகம். தமிழகத்தில் சிலருக்கு இந்த இடைவெளி மிகக் குறைவு.
ரஜினிக்கு, கலைஞன் என்பதற்கும், தலைவன் என்பதற்குமான இடைவெளி குறுகியதா? நீண்டதா? என்பதை காலம் பதில் சொல்லும்.
அரசியலில் காலடியெடுத்து வைத்து இருக்கும் ரஜினி முன்பு 3 சவால்கள் காத்து இருப்பதாக நான் கருதுகிறேன்.

முதலில் தனது எதிரி அல்லது எந்த கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். நண்பன் யார் என்பதை பின்னர் கூட முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் எதிரியை முதலாவதாக முடிவு செய்ய வேண்டும்.
2-வது மன்ற அரசியல் தலைவர்கள் யாரும் சாதிக்க முடியாததை நான் எப்படி சாதித்து காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்த கொள்கை விளக்கத்தை திட்டவட்டமாக தெளிவாக தீர்மானித்து தமிழக மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும்.
3-வது கொள்கை ஒன்று அறிவிக்கப்பட்டால், அதை கொண்டு செல்வதற்கு, அதை அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும், சிறந்த செயல் வீரர்களும் ஒரு இயக்கத்துக்கு, ஒரு தலைவருக்கு தேவை. இந்த மூன்றும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்கள்.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry
Next Story