search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    நான் அரசியல்வாதி அல்ல மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்கிறேன்: விஷால் பரபரப்பு பேட்டி
    X

    நான் அரசியல்வாதி அல்ல மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்கிறேன்: விஷால் பரபரப்பு பேட்டி

    நான் அரசியல்வாதி அல்ல மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்கிறேன் என்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நடிகர் விஷால் பேட்டி அளித்தார்.
    நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    மனுதாக்கல் செய்வதற்காக விஷால் இன்று காலை 8 மணிக்கு அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டார். முதலில் அண்ணாநகர் மகா காளியம்மன் கோவிலுக்கு நடந்து சென்றார்.

    அங்கு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டார். அங்கிருந்து காரில் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம் சென்றார்.

    காலை 8.30 மணிக்கு காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையை தொட்டு கும்பிட்டார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அங்கிருந்து ராமாவரத்துக்கு சென்றார்.

    அங்கு எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா நினைவு இடத்திலும் அவரது படத்துக்கும், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



    பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களுக்கு தேவையான பணிகள் எதுவும் நடக்கவில்லை. அங்குள்ளவர்களுக்கு இந்த மனக்குறை இருக்கிறது.

    விஷால் இங்கு வெற்றி பெற்றால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். என் பின்னால் யாரும் இல்லை. இது மக்களுக்காக நான் எடுத்த முடிவு.

    நான் அரசியல்வாதி அல்ல. இந்திய குடிமகன் அதை அடையாளப்படுத்துவதற்காகவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    நான் யாருக்கும் போட்டி அல்ல. எதிரியும் அல்ல. ஆர்.கே.நகர் மக்களின் குரலை எதிரொலிப்பதற்காகவே இங்கு நிற்கிறேன்.

    இளைஞர்கள் முடிவை யாரும் மாற்ற முடியாது. இன்றைய இளைஞர்கள் ஆதரவு நிச்சயம் எனக்கு இருக்கும்.

    எந்த அரசியல் கட்சியும் சாராமல் மக்கள் பிரதிநிதியாக நிற்கிறேன். மாற்றத்தை தரும் தேர்தலாக இது அமையும். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். எனவே இங்கு போட்டியிடுகிறேன்.

    இவ்வாறு விஷால் கூறினார்.
    Next Story
    ×