search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி கே.என்.காளை மாரடைப்பால் மரணம்
    X

    நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி கே.என்.காளை மாரடைப்பால் மரணம்

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் கே.என்.காளை சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
    நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் பதவி வகித்தவர் கே.என்.காளை. அவருக்கு வயது 84. இவர் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

    அவருடைய உடல் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.தாணு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கே.என்.காளையின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதன்பிறகு இறுதிச் சடங்குகள் நடந்தன. நேற்று மாலை 4 மணிக்கு சென்னை ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள சுடுகாட்டில் கே.என்.காளையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    மரணம் அடைந்த கே.என். காளையின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கோவிலடி. அவருடைய மனைவியின் பெயர் வசந்தா. இவர்களுக்கு ராஜூ, ரகுநாதன் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

    கே.என்.காளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 300-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘கிடாரி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 1000 படங்களுக்கு ‘டப்பிங்’ பேசியிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம், மலேசியாவின் நாடக காவலர் ஆகிய விருதுகளையும் பெற்றிருந்தார்.

    கே.என்.காளையின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், மூத்த நாடக நடிகரான கே.என்.காளை மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மரணம் கலையுலகிற்கு ஒரு இழப்பு. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×