search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிறந்த நாளையொட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய சூர்யா
    X

    பிறந்த நாளையொட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய சூர்யா

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரசிகர்களை குஷிப்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்ன என்பதை கீழே பார்ப்போம்...
    இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி இன்று காலை அவர் தனது தந்தை சிவகுமார், தாயார் லட்சமி அம்மாள் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் மனைவி ஜோதிகா, குழந்தைகள், குடும்பத்தினருடன் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    திரை உலகத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சூர்யாவுக்கு போன் மூலமும், இணையதளம் வழியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்தார். தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக சூர்யா அவரது பிறந்த தினத்தில் வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். எனவே ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். எனவே ரசிகர்களை சந்திக்க விரும்பினார்.

    இதையடுத்து, சூர்யா ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை ரசிகர்களை சந்தித்தார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இருந்தனர்.

    சூர்யாவை சந்திப்பதற்காக சென்னை வந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ரசிகர்கள் சூர்யாவுடன் சேர்ந்து அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை பாராட்டினார். நீண்ட நேரம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

    சூர்யா பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினார்கள். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்வேறு உதவிகளையும் வழங்கினார்கள். சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் ரத்ததானம் வழங்கினார்கள். கும்மிடிபூண்டியிலும் ரத்த தானம் வழங்கப்பட்டது. இதுபோல் மாநிலம் முழுவதும் ரத்ததானம் வழங்கப்பட்டது.

    திருத்தணி, வடபழனி கோவில்களில் சூர்யா பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் தங்கதேர் இழுத்தனர். திருவள்ளூரில் அன்னதானம் நடந்தது. உடைகள், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ஏழைகள், மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிகளில் சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், அ.பரமு, இரா.வீரமணி, ஆர்.ஏ ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
    Next Story
    ×