search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிரையம்ப் ராக்கெட்
    X
    டிரையம்ப் ராக்கெட்

    சீறிப்பாயும் செயல்திறனுடன் உருவாகும் டிரையம்ப் ராக்கெட் 3 மாடல்கள்

    பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் முன்னணியில் இருக்கும் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது.



    பிரீமியம் மோட்டார்சைக்கிள் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. ஆகிய மாடல் மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. 

    நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஜி.டி. மாடல் மட்டும் குரூயிஸர் வகையைச் சேர்ந்தது. ஆனால் இரண்டு மாடலிலுமே ஒரே திறன் உள்ள என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிரையம்ப் மாடல் மோட்டார்சைக்கிள் 2,500 சி.சி. திறன் கொண்டது.

    முந்தைய ராக்கெட் மாடல் 2,300 சி.சி. திறன் கொண்டதாக வந்தது. தற்போதைய மாடலின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இது 3 சிலிண்டரைக் கொண்டது. 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் திறன் 11 சதம் கூடுதலாகும். 

    அதேபோல 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.79 வினாடிகளுக்குள் தொட்டுவிட முடியும்.

    டிரையம்ப் ராக்கெட்

    இந்த மோட்டார்சைக்கிளின் புதிய என்ஜின் எடை குறைவானது. முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ குறைந்துள்ளது. இதனால் சீறிப் பாய்வதோடு மைலேஜும் கூடுதலாக தரும். இதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதிகள் உள்ளன. மழை நேரத்தில் ஓட்டுவதற்கும், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கும், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என இரண்டு வசதிகள் உள்ளன.

    டிரையம்ப் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை டி.எப்.டி. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரை இதில் பயன்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனுடன் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் இதன் தொடுதிரை வசதி உள்ளது. 3 ஆர் மாடலில் ஒரே கம்பியில் வடிவமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உள்ளது. 

    3 ஜி.டி. மாடலில் சற்றே ஓய்வாக ஓட்டும் வகையில் ஹேண்டில்பார் உள்ளது. காலை நீட்டி சொகுசாக பயணிக்கும் வகையில் கால் வைக்கும் வசதியும் உள்ளது. இரண்டு மாடலிலுமே அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலும் வந்துள்ளன. முன் சக்கரத்தில் டூயல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    இரண்டு மாடல் மோட்டார்சைக்கிளுமே இந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நவம்பர் 5-ம் தேதி முதல் நடைபெற உள்ள இ.ஐ.சி.எம்.ஏ. கண்காட்சியில் இடம்பெறுகிறது. அடுத்த ஆண்டு இந்த மாடல்கள் முதலில் ஐரோப்பிய சந்தையிலும், பின்னர் அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×