சினிமா
அப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா
சென்னை
சினிமா

அப்படி செய்வது ஆண்மை இல்லாத்தனம் - 96 படக்குழுவை சாடிய இளையராஜா

மாலை மலர்

தனது பாடல்களை ‘96’ படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா, அப்படி செய்வது இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுவதாக கூறினார்.

இளையராஜா இசையமைத்த பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட்டு வந்தன. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று அறிவித்தார். மீறி பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

வெளிநாடுகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி வந்தார். அவருக்கும் இளையராஜா நோட்டீசு அனுப்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த சில படங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. விஜய் சேதுபதி, திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘96’ படத்திலும் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.



அந்த படத்தில் “எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

இந்த நிலையில் ‘96’ படத்தில் பணியாற்றிய ஒருவர் ‘96’ படத்தில் நாங்கள் பயன்படுத்திய இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கும் அனுமதி பெறப்பட்டது. அந்த பாடல்களுக்கு ராயல்டியும் கொடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடையவை