Maalaimalar
மே 12, 1947ல் தூத்துக்குடி மாவட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் -பூலித்துரை மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். 1971-இல் இவரின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது.
வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் போன்றவை பூமணியின் சிறுகதை தொகுப்புகளாகும்.
வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை போன்றவை இவர் எழுதிய புதினங்களாகும். இவரின் அஞ்ஞாடி என்னும் நூலுக்கு 2014ல் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
இவர் எழுதி இயக்கிய "கருவேலம் பூக்கள்" 1997ல் திரையில் வெளிவந்தது. மேலும் இவர் எழுதிய வெக்கை புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமே 2019ல் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம்.
இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது, சாகித்திய அகாதமி விருது, விளக்கு விருது ஆகியனவாகும்.
இவர் தனது 79ஆவது வயதில் நேற்று(12.07.2026) இரவு காலமானார். இன்று மாலை அவரது உடல் தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.