கங்கா ஸ்நானம் ஆச்சா?

Maalaimalar

தென்னிந்தியாவில் தீபாவளி அதிகாலையில் எண்ணெய் நீராடுவதிலிருந்தே தொடங்குகிறது.

தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். அதை ‘கங்கா ஸ்நானம்’ என்றும் அழைக்கிறோம்.

தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டிலேயே நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

தீபாவளி நாளின் அதிகாலை பொழுதில் நீரில் கங்காதேவியும், நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதியும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும் எழுந்தருள்வதாகக் கூறுகிறார்கள் நம் முன்னோர்கள்.

நீராடி முடித்ததும் புத்தாடை அணிவது அடுத்த மங்கலமான நிகழ்வாகும். புதிய ஆடைகளை இறைவனின் திருவடிகளில் வைத்து வணங்கி, மஞ்சள் இட்டு அணியும் வழக்கம் மிகவும் நல்லது.

தீபாவளி நாளில் விநாயகர், மகாலட்சுமி, கிருஷ்ணர் மற்றும் அவரவர் குடும்ப வழிபாட்டுத் தெய்வங்களை வணங்கி விளக்கேற்ற வேண்டும். மாலையில் மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் சிறப்பு.

குழந்தைகளுக்குப் புத்தாடை அணிவித்து மகிழ்வதும், பெரியவர்களிடம் ஆசி பெறுவதும் குடும்பப் பாசத்தை மேலும் வலுப்படுத்தும்.

இறைவழிபாடு செய்யும்போது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பலவகையான இனிப்புகளும் கார வகைகளும் படையலாகப் படைக்கப்படுகின்றன.

இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் வழங்கி மகிழ்வதும், ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை வழங்குவதும் தீபாவளி கற்றுத் தரும் உயர்ந்த பண்பாடுகளாகும்.