உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் காலை நேர பழக்கங்கள் 7

Rebecca

காலையில் எழுந்ததும் ஒருசில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உடலை மட்டுமல்ல மனதையும் உற்சாகமாக செயல்பட வைக்கும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
ஊற வைத்த உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன.
இரவில் 5 முதல் 7 உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை பருகிவிட்டு உலர் திராட்சையை சாப்பிடவும்.
உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும், செரிமானத்தை மேம்படுத்தும், இரும்புச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தும், உடலில் இயற்கையாக உள்ள ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.
காலையில் எழுந்த உடனேயே அலைபேசியை பார்க்கும் ஆவல்தான் பலருக்கும் ஏற்படும். அப்படி அலைபேசியை பார்ப்பது மனதை திசை திருப்பும், நாளடைவில் மன அழுத்தத்தை தூண்டுவதற்கு காரணமாகிவிடும்.
அதற்கு இடம் கொடுக்காமல் எழுந்ததும் 30 நிமிடங்கள் அறவே அலைபேசியை தவிர்த்துவிட வேண்டும். அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும்.
அதற்கு மாற்றாக சிறிது நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கலாம், ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு சுவாசிக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை பருக விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக வெதுவெதுப்பான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை தூண்டிவிடும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவிடும்.
காலையில் வழக்கமாக உண்ணும் உணவுடன் புரதச்சத்து இடம் பெறும் உணவுப்பொருளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை சிறந்த தேர்வாக அமையும்.
ஓட்ஸ் அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம். வாழைப்பழம் அல்லது பெர்ரி வகை பழங்களையும் சாப்பிடலாம்.
காலையில் வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். அவை செரிமானத்தை மெதுவாக்கி மந்தமான உணர்வை தரும்.
காலையில் 5 நிமிடங்கள் மனதிற்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியமானது. அது தியானமாகவோ, ஆழ்ந்த சுவாசமாகவோ, இசை கேட்பதாகவோ இருக்கலாம்.
இதற்காக 5 நிமிடங்கள் செலவிட்டாலே போதும். தேவையற்ற பதற்றத்தை குறைத்து மனதை நிலைநிறுத்த உதவிடும்.
இல்லாவிட்டால் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை சிறிது நேரம் அமைதியாக வைத்திருந்தாலே போதும். அன்றைய நாளின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.
காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் 5 நிமிடங்கள் உடலுக்கு அசைவு கொடுக்கும் எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதுமானது. ரத்த ஓட்டத்தை சீராக முடுக்கிவிடுவதற்கு வழிவகை செய்யும்.
எளிய யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம். அல்லது சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளலாம். இவை மனதுக்கு இதமளிக்கும். முதுகெலும்புக்கும் பலம் சேர்க்கும்.
அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளில் முதல் 3 விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதனை சுற்றியே சிந்தனையும், செயல்பாடும் அமையும்.
அது அன்றைய நாளை வேறு விஷயங்களுக்கு கவனத்தை திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ளவும் உதவிடும்.