Maalaimalar
நீண்ட முடி கொண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் முடி உதிர்வு, முடி மெலிதல், முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் முடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. உண்ணும் உணவிலேயே முடி வளர்ச்சியை வேகப்படுத்த உதவிடும் முக்கியமான 5 வைட்டமின்கள் உள்ளன.
முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய வைட்டமினாக பயோட்டின் அமைந்திருக்கிறது. முட்டை, நட்ஸ், விதைகள், சால்மன் மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் பயோட்டின் இயற்கையாகவே காணப்படுகிறது.
அடர்த்தியான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை விரும்பினால் வைட்டமின் டி அவசியம். மீன்கள், காளான்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மூலமாகவும் வைட்டமின் டி-யை பெறலாம். வைட்டமின் டி முடியின் மயிர்க்கால்களுக்கு சிறந்த நண்பன்.
பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை, அவகேடோ பழங்கள் மூலம் வைட்டமின் இ அளவை அதிகரிக்க செய்யலாம். வைட்டமின் இ நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது கூட முடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பசலைக்கீரை உள்ளவற்றில் வைட்டமின் ஏ மிகுந்திருக்கும். வைட்டமின் ஏ அளவு அதிகமாகிவிட்டால் முடி உதிர்வையும் ஏற்படுத்தக்கூடும் எனவே அளவோடு உட்கொள்வது முக்கியமானது.
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, குடைமிளகாய் மற்றும் புரோக்கோலி ஆகியவற்றில் இருந்து வைட்டமின் சி பெறலாம்.
முடி வளர்ச்சிக்கு உணவே சிறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். மருத்துவர் பரிந்துரைக்காமல் வைட்டமின் மாத்திரைகளை பயன்படுத்தாதீர்கள்.