தொழில்நுட்பம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் இலவசமாக பார்க்க வழி செய்யும் ரிலையன்ஸ் ஜியோ

Published On 2019-06-05 04:41 GMT   |   Update On 2019-06-05 04:41 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பயனர்கள் நேரலையில் பார்த்து ரசிக்க புதிய சலுகையை அறிவித்துள்ளது.



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பிரியர்களுக்காக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கிரிக்கெட் பிரியர்கள் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஜியோ டி.வி. செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம். கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசிக்க பயனர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. 

இந்த சலுகையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ ஹாட்ஸ்டாருடன் கூட்டணி சேர்ந்து பயனர்களுக்கு ரூ.365 மதிப்புள்ள பலன்களை இலவசமாக வழங்குகிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ. நடத்தும் இதர கிரிக்கெட் போட்டிகளை பயனர்கள் இலவசமாக பார்க்கும் வசதியை வழங்கியது.



அந்த வகையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கவில்லை. இலவச சேவையுடன் பயனர்கள் மைஜியோ செயலியை பயன்படுத்தி ஜியோ கிரிக்கெட் பிளே போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் பயனர்கள் ஏராளமான பரிசுகளை வென்றிட முடியும். இத்துடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றிய அனைத்து விவரங்களையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த போட்டியில் ஜியோ மற்றும் ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க் சேவையை பயன்படுத்துவோரும் கலந்து கொள்ளலாம்.



இதுதவிர ரூ.251 விலையில் கிரிக்கெட் சலுகையையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதில் கிடைக்கும் டேட்டாவை பயனர்கள் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். இது வழக்கமான சலுகைகளை விட வித்தியாசமானதாகும். கிரிக்கெட் சீசன் டேட்டா பேக் பெயரில் கிடைக்கும் இச்சலுகையை கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசிக்க கூடுதல் டேட்டா தேவைப்படும் பயனர்கள் பயன்படுத்தலாம்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக கண்டுகளிக்க பயனர்கள் முதலில் ரிலையன்ஸ் ஜியோ இணைப்பில் மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும். பின் ஸ்மார்ட்போனில் ஹாட்ஸ்டார் செயலியை திறக்க வேண்டும். ஒருவேளை ஹாட்ஸ்டார் செயலி இல்லாதவர்கள் ஜியோ டி.வி. செயலியில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க விரும்பினால் ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கக் கோரும்.

கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வசதியில் பயனர்களுக்கு சேவைக்கான சந்தா மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கான மொபைல் டேட்டா வழக்கம்போல் தீர்ந்து போகும். அந்த வகையில் கிரிக்கெட் சீசன் டேட்டா சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News