அறிந்து கொள்ளுங்கள்

புதிய வரி சலுகை - இந்த டிவிக்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும்

Update: 2023-02-02 04:53 GMT
  • இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் டிவி பாகங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.
  • எல்இடி டிவிக்களின் 60 முதல் 70 சதவீத உற்பத்தி செலவை ஒபன் செல் பேனல்கள் எடுத்துக் கொள்கின்றன.

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகி உள்ளது. எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்வதற்கான 60 முதல் 70 சதவீத கட்டணத்தை ஒபன் செல் பேனல்களே எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற பேனல்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.

"தொலைகாட்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் ஒபன் செல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதமாக குறைக்க முன்மொழிகிறேன்," என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். இந்த அறிவிப்பு உள்நாட்டு சேவை மதிப்பை கூட்டுவதோடு, சந்தை வளர்ச்சிக்கு உதவும் என நுகர்வோர் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் எரிக் பிரகான்சா தெரிவித்தார்.

பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கான உரிமம் வைத்திருக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக், இந்திய சந்தையில், சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதை அடுத்து டிவிக்களின் விலை ஐந்து சதவீதம் வரை குறையும் என தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசின் சுங்க வரி குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பல்வேறு டிவி உற்பத்தியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிவிக்களின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படலாம் என SPPL தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான அன்வீத் சிங் மர்வா தெரிவித்தார். 

Tags:    

Similar News