சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் நமது கூட்டணியில் உள்ள கட்சிகளின் தயவால் தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது. நம்ம கூட்டணியில் உள்ள சில கட்சிகள் நம்ம தலைவரிடம் வந்து தலைவரின் உத்தரவை பெற்று, அனுமதியை பெற்று ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், 20 வருடத்திற்கு மேல் நமது முதுகு மேல் ஏறி நின்று சவாரி செய்த காங்கிரஸ் கட்சி இன்று நம் முதுகில் குத்திவிட்டு போயிருக்கிறது. இதை யாரும் மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவில் பா.ஜனதாவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், காங்கிரஸ் கட்சி தான் பா.ஜனதாவின் தொடர் வெற்றிக்கு காரணம் என்பது இப்போது தான் தெரிகிறது. அப்படிப்பட்ட காங்கிரசை நம்முடைய தலைவர்கள் தான் தோளில் சுமந்து கடத்தினார்கள்.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். பா.ஜனதாவை தமிழ்நாட்டிற்குள் விட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. தொண்டர்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெற வெச்சிட்டு இருக்கிறோம். இந்த தேர்தலிலும் அதைத் தான் செய்தோம். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் ஜெயிக்க நம்முடைய உழைப்பு தான் காரணம்.
நம்ம தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் போட்டுள்ள ஓட்டில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போய்விட்டார்கள். குறைந்தபட்ச நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரசை இனி எந்த காலத்திலும் நாம் நம்பப்போவது இல்லை. அவர்களுக்கு சரியான பாடத்தை நாம் கற்றுக்கொடுக்கிறோமோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் கற்றுக் கொடுப்பார்கள்.
இன்று நாம் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், இன்றும் நமது ஆட்சியின் சாதனைகள் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நமது அரசின் சாதனைகளுக்கு இந்த சோபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
சட்டமன்றத்தில் நான் பேசினேன். இது ஒன்றும் இன்ஸ்டாகிராம் அல்ல. ரீல்ஸ் போடுகிற ஆட்சி அல்லாமல் ரியல் ஆட்சியை கொடுங்கள் என்று நான் சொன்னேன். ஆனால், இன்று 15 நாட்களுக்குள் முதலமைச்சரின் அறைக்குள்ளேயே ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்த குறைந்த நாட்களுக்குள்ளேயே ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த செய்திகளை மறைக்க ஆளும் கட்சியின் ஆன்-லைன் மாபியா கும்பல் தினமும் ஒரு பொய் செய்தியை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாலம் நாம் மட்டும் பார்க்கவில்லை. பொதுமக்களும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஆட்சியின் உண்மை முகம் முழுசாக தெரிந்த உடன் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக நம்ம தலைவரை தேடி வருவார்கள். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.
கொரோனா, புயல், மழை போன்ற பேரிடர் நேரத்தில் நாம் மக்களோடு மக்களாக நிற்போம். இப்போதும், தமிழ்நாட்டில் ஒரு பேரிடர் நடந்து கொண்டு இருக்கிறது. இதில், இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பு இளைஞர் அணி தம்பிமார்களிடம் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.