ஒமைக்ரான் வைரஸ் 
தமிழக செய்திகள்

வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்தவருக்கு ஒமைக்ரான் அறிகுறி

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள ஒமைக்ரான் வார்டில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகர்கோவில்:

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 450 க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் சளி மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் .

இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்பொழுது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள ஒமைக்ரான் வார்டில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அந்த வாலிபரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சளி மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது.

பரிசோதனை முடிவில் தான் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும்.