இந்தியா

தாய் தற்கொலையில் தந்தையின் அக்கிரமங்களை அம்பலப்படுத்திய குழந்தைகள்: ராஜஸ்தானில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!

கணவன் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண் சந்தித்த அக்கிரமங்களை குழந்தைகள் அம்பலபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பொதுப்பணித்துறையில் நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரியும் கௌதம் மீனா என்பவரின் மனைவி அனு மீனா. இவர்களுக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயது மகன் மாஹிர் மற்றும் 8 வயது மகள் செமைரா என்று 2 குழந்தைகளும் உள்ளனர்.

திருமணமான சில நாட்களிலிருந்தே கௌதம் மீனா தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியை கடுமையான வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கணவனின் தொடர் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அனு மீனா.

இந்த கொலை வழக்கில் போலீசார் அவர்களின் குழந்தைகளை விசாரித்தபோது, 2 குழந்தைகளும் தனது தந்தையின் கொடூரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, 'அப்பா அடிக்கடி அம்மாவை அடிப்பார்'. ஒருநாள் அம்மாவின் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்று அப்பா டிவி-யில் பாடலை சத்தமாக வைத்துவிட்டு, அம்மாவை அடித்தார் என அவர்களின் மகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்பா அம்மாவை அடிக்கடி அடிப்பதால் அம்மாவிற்கு ரத்த அழுத்தம் (BP) குறையும், அம்மா அப்போது எங்களிடம் உப்பு கலந்து தண்ணீரை எடுத்து வர சொல்வார்கள். ஆனால் அப்பா தண்ணீரை கூட குடுக்க விடாமல் தடுப்பார் என்று அழுதுகொண்டே கூறியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அன்று தன் கணவர் கெளதமிற்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து கணவனின் பார்வையிலேயே தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அனுமீனாவை காணவில்லை என்று பார்த்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்காமல் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்ததில் தற்கொலை செய்துள்ள என்பதும் தெரிவித்துள்ளது.

அனு மீனா மறைந்து சில நாட்களுக்குப் பிறகு, அவரது போனை பரிசோதித்த மகன் மாஹிர், அதில் இருந்த பல வீடியோக்களை மீட்டெடுத்துள்ளான். கார் ஓட்டும்போது கௌதம் மீனா, அனு மீனாவையும் அவரது குடும்பத்தினரையும் மிக கேவலமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஆதாரங்கள் தற்போது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அனு மீனாவின் சகோதரர் நீரஜ் மீனா கூறுகையில், "ஒவ்வொரு முறை அடிக்கும்போதும் கௌதம் மன்னிப்பு கேட்பார், நிலைமை மாறும் என நம்பினோம். ஆனால் இந்த விபரீதம் நடந்த பிறகும் கூட, 'சில நாட்கள் ஜெயிலுக்குப் போவதால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை' என கௌதம் திமிராகப் பேசுகிறார்" இது எங்களுக்கு மிக வேதனையை தருகிறது என்றார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், மீட்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் வீட்டின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.