தேசியத் தலைநகரில் உள்ள மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப் பகுதிகளில் ஒன்றில் ஜிம்கானா கிளப் அமைந்துள்ளது.
சஃப்தர்ஜங் சாலை எண் 2-இல் அமைந்துள்ள இந்தக் கிளப்பானது லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகில் இருப்பதுடன், முக்கிய அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களால் சூழப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக டெல்லியில் உள்ள லூட்டியன்ஸ் ஜிம்கானா கிளப்பின் 27.3 ஏக்கர் பரந்த வளாகத்தை ஜூன் 5-ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு மத்திய அரசு ஆணையிட்டது.
இதனைத்தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ தகவலில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடமிருந்து (L&DO) மே 22 தேதியிட்ட கடிதம் ஒன்றைப் பெற்றதாக அந்தக் கிளப் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிளபின் நிர்வாகக் குழு ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. மேலும் அந்த கூட்டத்தின் மூலம், மத்திய அரசின் உத்தரவு தொடர்பான பல விஷயங்களில் தெளிவு கூறவேண்டும் என்று அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
எந்தவித இடையூறும் இன்றி கிளப்பின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்வது இக்கோரிக்கையின் முதன்மை நோக்கமாகும் என்று கூறியுள்ளது. அத்துடன், அமைச்சக அதிகாரிகளுடன் அவசர சந்திப்பிற்கு நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.