உலகம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு- பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தகவல்

Published On 2022-05-18 10:55 GMT   |   Update On 2022-05-18 10:55 GMT
இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி 4500 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, நாட்டை சரிவில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அரசு துறைகளில் எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அரசிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணையுடன் இலங்கை துறைமுகத்தில் இருக்கும் 3 கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை.

இதையடுத்து அமெரிக்க டாலரை வெளிச்சந்தையில் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்து ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நிலவரப்படி 4500 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் இந்த நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பண பற்றாக்குறை இருக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் முடிவு குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடிப்பதால் நாட்டின் நாணய மதிப்பு மேலும் சரிவடையும்’ என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News