உலகம்
ரஷிய அதிபர் புதின்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் பள்ளியின் மீது ரஷியா குண்டுவீச்சு- பலர் உயிரிழப்பு?

Published On 2022-05-07 23:01 GMT   |   Update On 2022-05-08 11:23 GMT
ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

08.05.2022

16:00: கிழக்கு பகுதியில் உள்ள போபாஸ்னா நகரில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் பின்வாங்கிவிட்டதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் இன்று கூறி உள்ளார். போபாஸ்னாவின் பெரும்பகுதியை தங்கள் படைகள் கைப்பற்றியதாக ரஷியாவின் செச்சினியா குடியரசின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் கூறியிருக்கிறார்.

15:30: ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நேட்டோ முன்னாள் பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் போக் ராஸ்மசன் தெரிவித்துள்ளார். 

11:30: உக்ரைனின் பிலோஹோரிவ்கா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்கியது. இதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சுமார் 60 பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இத்தகவலை லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார். 

10:00: உக்ரைனுக்கு 1.3 பில்லியன் பவுண்டுகள் (1.6 பில்லியன் டாலர்) கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என பிரிட்டன் கருவூல தலைமை அதிகாரி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

 06.50: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் பகுதியில் 77 வயதான உக்ரைன் பெண் ஒருவர் தனது மூன்று சக ஊழியர்களுடன் சேர்ந்து விலங்குகள் காப்பகத்தை நடத்தி வருகிறார். அந்த காப்பகத்தில் 700 நாய்கள் மற்றும் 100 பூனைகள் இருந்தன. தற்போது போரினால் அப்பகுதி பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற அந்த பெண் மறுத்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சக ஊழியர்களுடன் அவர் அந்த காப்பத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

04.20: மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலை பகுதியில் பதுங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது முதல் கட்டமாக அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி என்று அவர் கூறியுள்ளார். 

போர் காரணமாக காயம் அடைந்தவர்கள் மற்றும் மருத்துவர்களை உருக்கு ஆலை பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

03.30:  உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.40: ரஷியா-உக்ரைன் இடையே 2 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் சண்டை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஐரோப்பிய மோதலாக கருதப்படுகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாக உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமைக்கு முன்னதாகவே ரஷியா தாக்குதல்களை அதிகரிக்கும் என்று உக்ரைன் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

01.20:  ரஷிய படைகள் தெற்கு உக்ரேன் நகரமான எஃப் ஒடேசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும் மரியுபோல் உருக்கு ஆலை பகுதியிலும் ரஷிய ராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதியில் பதுங்கியிருந்த  பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அறிவித்த நிலையில், ரஷிய தாக்குதல் நடத்தியுள்ளது. 

12.10: உக்ரைன் உடனான போரில் ரஷிய படைகள் தோல்வி அடையாது என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குநர் பில் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தாலும், டான்பாஸ் பிராந்தியத்தில் அவர்கள் முன்னேறி வருவதால்
தமது ராணுவத்தினர் உக்ரைனை தோற்கடிக்க முடியும் என்ற புதின் கருத்தில் மாற்றம் காணப்படவில்லை என்றும், இதனால் அவர் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் பில் பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

07.05.2022

23.30: ருமேனியாவில் தஞ்சம் புகுந்துள்ள உக்ரைன் பெண்களை அமெரிக்க அதிபர் ஜே பைடன் மனைவி ஜில் பைடன் சந்தித்து பேசினார். ரஷியா தாக்குதலை தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 9,10,000 உக்ரைன் மக்கள் அகதிகளாக ருமேனியா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் புக்கரெஸ்ட் நகரில்  உள்ள ஒரு பள்ளி ஒன்றில் தங்கியிருந்த உக்ரேனிய பெண்களை சந்தித்த  ஜில் பைடன் அவர்களின் வலிமையை பாராட்டினார்.

19:30: உக்ரைனின் சுமி பிராந்தியத்தில், ரஷிய எல்லைக்கு அருகில் இரண்டு இடங்களை ரஷிய ஏவுகணைகள் தாக்கியதாக பிராந்திய ஆளுநர் டிமித்ரோ ஜிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒரு எல்லைக் காவலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

18:00: மேலும் ஒரு ரஷிய கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது. இந்த முறை, துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வைப்பதற்கான கப்பலை அழித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 
 
13:00: மரியுபோல் அசோவ்ஸ்டல் ஆலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ள ஏராளமான பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அசோவ்ஸ்டல் ஆலையில் இருந்து வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட பலர், ஐ.நா. சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரஷிய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். 11 குழந்தைகள் உள்பட 50 பேர் வெளியேற்றப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. மக்களை வெளியேற்றும் பணி வார இறுதியிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:00: தூதரக நடைமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தை பாதை மட்டுமே உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சாத்தியமான வழி என்றும், ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த தீர்வையும் எட்ட முடியாது என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. 

Tags:    

Similar News