உலகம்
விபத்தில் உருக்குலைந்த ஓட்டல்

கியூபா ஓட்டலில் வெடி விபத்து- உயிரிழப்பு 22 ஆக உயர்வு

Published On 2022-05-07 07:12 GMT   |   Update On 2022-05-07 14:14 GMT
இது குண்டு வெடிப்போ அல்லது தாக்குதல் சம்பவமோ கிடையாது, இது ஒரு சோகமான விபத்து என்று கியூபா அதிபர் மிகுவல் டயஸ் கேனல் தெரிவித்தார்.
ஹவானா:

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது தெரிய வந்தது.

ஓட்டலை புதுப்பிக்கும் பணி நடந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் தங்கவில்லை. ஆனால் சக்திவாய்ந்த வெடி விபத்தால் ஓட்டலை சுற்றி உள்ள கட்டிடங்களும் சேதம் அடந்தன. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று,  இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இன்று அதிகாலை நிலவரப்படி 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. 74 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அதிபர் மிகுவல் டயஸ் கேனல் கூறும்போது, ‘இது குண்டு வெடிப்போ அல்லது தாக்குதல் சம்பவமோ கிடையாது. இது ஒரு சோக மான விபத்து. ஓட்டலை சுற்றி உள்ள கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்’ என்றார்.

இந்த விபத்து தொடர்பாக கியூபா டி.வி. சேனல் கூறும்போது, லாரியில் இருந்து ஓட்டலுக்கு எரிவாயு சப்ளை கொடுத்தபோது கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தது. 
Tags:    

Similar News