உலகம்
இம்ரான் கான்

பாகிஸ்தானில் ஆட்சி கவிழ காரணம் ராணுவ தளபதியா?: இம்ரான்கான் மறைமுக குற்றச்சாட்டு

Update: 2022-04-22 02:10 GMT
இம்ரான்கான் திடீரென என ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
லாகூர் :

அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்தது இல்லை.

அந்த வகையில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் இதில் அன்னிய நாட்டின் (அமெரிக்கா) சதி இருப்பதாக இம்ரான்கான் ஆதரவு சபாநாயகரும், துணை சபாநாயகரும் கூறி, ஓட்டெடுப்பு நடத்த மறுத்து விட்டனர்.

அதன்பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக், சபைக்கு தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினார். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேர் ஓட்டு போட்டனர். இதனால் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது.

இம்ரான்கானும் 5 ஆண்டு தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாமல் போனது. இது அவருக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சி கவிழ்ப்புக்கு அமெரிக்காவை மறைமுகமாக குற்றம் சாட்டி வந்த இம்ரான்கான், இப்போது திடீரென என ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் நியமனத்துக்கு இம்ரான்கான் முதலில் ஒப்புதல் அளிக்க மறுத்து, கடைசியில்தான் ஒப்புதல் வழங்கினார். அது முதற்கொண்டு அவர் ராணுவத்தின் ஆதரவை இழந்து விட்டதாக பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இம்ரான்கான் தனது கட்சியினருடன் டுவிட்டர் வாயிலாக பேசினார். அப்போது அவர் விடுத்த பதிவில்தான் ஆட்சி கவிழ ராணுவ தளபதிதான் காரணம் என்று மறைமுகமாக சாடி உள்ளார்.
Tags:    

Similar News