உலகம்
மான்

முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு

Published On 2022-03-08 03:08 GMT   |   Update On 2022-03-08 03:08 GMT
நியூயார்க்கில் சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். கடந்த டிசம்பர் 12-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதிவரை 131 மான்களில் ரத்த மாதிரியை சேகரித்தனர்.

அவற்றை ஆய்வு செய்தபோது, 19 மான்களில் கொரோனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்ட 68 மான்களில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, வெள்ளை நிற மான்கள் சிலவற்றில் 
ஒமைக்ரான் வைரஸ்
இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாதிரி எடுக்கப்பட்ட வெள்ளை நிற மான்களில் 80 சதவீத விலங்குகளில் ஒமைக்ரான் இருந்துள்ளது.

இந்த மான்கள் நியூயார்க்கில் ஸ்டேடன் தீவில் வாழ்ந்து வருகின்றன. சுதந்திரமாக வாழ்ந்து வரும் உயிரினங்களில் ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும். நியூயார்க்கில் சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிகிறது. சில மான்களில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மனிதர்களை போலவே இந்த மான்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கால்நடை மருத்துவம் மற்றும் உயிரி மருத்துவ பேராசிரியர் சுரேஷ் குச்சிப்புடி கூறியதாவது:-

மான்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவது தொடர்பாக இதுவரை உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. கொரோனா உருமாற்றம் அடைந்து முற்றிலும் புதிய கொரோனா உருவாகவும், அது தற்போதைய தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாததாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

மான்களுக்கு கொரோனா பரவுவதையும், அவை மூலம் மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News