உலகம்
அறுவை சிகிச்சை (கோப்பு படம்)

தடுப்பூசி போடாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை

Published On 2022-01-27 13:14 GMT   |   Update On 2022-01-27 13:14 GMT
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு துண்டிக்கப்படுவதுடன், கொரோனாவால் மரணமும் ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர் ஆர்தர் கேப்லான் கூறுகிறார்.
பாஸ்டன்:

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தடுப்பூசி செலுத்தாததால் நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாஸ்டன் நகரில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில், 31 வயது நபர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். 

உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதால், நோயாளிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கொள்கையை மருத்துவமனை நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. ஆனால், அந்த நோயாளியோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்துள்ளார். இதனால், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 

இதுபற்றி நோயாளியின் தந்தை டேவிட் பெர்குசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் காலம் எல்லை கடந்துவிட்ட நிலையில், என் மகன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறான். மருத்துவமனையின் இந்த முடிவு, என் மகனின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. தடுப்பூசியை அவன் நம்பவில்லை. அதேசமயம், தடுப்பூசி போடுவது அவர்கள் செயல்படுத்தும் கொள்கை. அதனால், இதய மாற்று அறுவை சிகிச்சையின் பட்டியலிலிருந்து அவரை நீக்கிவிட்டனர். என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு அளித்து, அவனை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஆனால், அதற்கு அதிக கால அவகாசம் இல்லை. அவனது உடல்நிலை மோசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு துண்டிக்கப்படுவதுடன், கொரோனாவால் மரணமும் ஏற்படலாம் என நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர் ஆர்தர் கேப்லான் கூறுகிறார். 

உறுப்புகள் பற்றாக்குறையாக உள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்ட மற்றவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர்வாழ சிறந்த வாய்ப்பு இருக்கும்போது, ​​உயிர்வாழ வாய்ப்பில்லாத ஒருவருக்கு உறுப்புகளை பொருத்துவதற்கு மருத்துவமனை விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

அமெரிக்காவில் மொத்த மக்கள்தொகையில் 62 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News