உலகம்
உக்ரைன் எல்லை

ரஷியா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடரும்: பேச்சுவார்த்தையில் முடிவு

Published On 2022-01-27 07:03 GMT   |   Update On 2022-01-27 07:09 GMT
பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷியா, உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பாரிஸ்:

சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது. கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷியாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைனில் இப்போதும் ரஷிய மொழி பேசுவோர் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ உக்ரைனை தன்னுடன் இணைத்து கொள்ள விரும்புகிறது. ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

இதையடுத்து உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தலுக்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து இருநாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து உக்ரைன், ரஷ்யா ஆகிய நாட்டின் பிரதிநிதிகள் பிரான்ஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

8 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News