உலகம்
கோப்பு படம்

ஹவுத்தி ஏவுகணை தாக்குதலை அபுதாபி ராணுவம் முறியடித்தது- பெரும் சேதம் தவிர்ப்பு

Published On 2022-01-24 10:12 GMT   |   Update On 2022-01-24 10:12 GMT
2 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அபுதாபி:

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் எண்ணை வளம் மிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் ஏமன் அரசு, அவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப்படையினர் தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபி மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் ஆக மொத்தம் 3 பேர் பலியானார்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஹவுத்தி இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தநிலையில் இன்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 2 சக்திவாய்ந்த ஏவுகணைகளை அபுதாபி மீது செலுத்தி தாக்குதலில் ஈடுபட முயன்றனர். இந்த ஏவுகணை தாக்குதலை அபுதாபி ராணுவம் நடுவானில் முறியடித்தது.

2 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏமன் கூட்டுப்படையினர் தாக்குதலில் இதுவரை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News